‘ஏஐ’, மின்சார வாகனங்களை நாடும் அஞ்சல் நிறுவனங்கள்

‘ஏஐ’, மின்சார வாகனங்களை நாடும் அஞ்சல் நிறுவனங்கள்

2 mins read
எரிபொருள் விலை அதிகரிப்பைச் சமாளிக்க முயற்சி
1ec025af-8241-4394-b28b-d3f87e0194ec
டிஎச்எல், ஃபெட்எக்ஸ் போன்ற நிறுவனங்கள் தகவல்களைப் பகிர்ந்துகொண்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

மத்திய கிழக்குப் பூசலால் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகமாக இருந்து வரும் நிலையில் சிங்கப்பூரில் இயங்கும் முக்கிய அஞ்சல் நிறுவனங்கள் மாற்றுப் போக்குவரத்து வழிகளையும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அம்சங்களையும் நாடுகின்றன.

ஈரான் போர் தொடங்குவதற்கு முன்னரே தாங்கள் செயல்படுத்திய பசுமை நடவடிக்கைகள், பெட்ரோலை மட்டுமே சார்ந்திராமல் இருப்பதற்கு உதவியிருப்பதாக டிஎச்எல், ஃபெட்எக்ஸ், ஜே&டி எக்ஸ்பிரஸ் போன்ற அஞ்சல் சேவை நிறுவனங்கள், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன. கூடுதலாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது, எரிபொருள் மற்றும் எரிசக்திப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் விநியோகச் சேவைகளுக்கென உகந்த பாதைகளைத் தெரிந்துகொள்ள செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும்.

எரிபொருளுக்கான செலவில் ஒரு பங்கைப் பயனீட்டாளர்கள் சுமக்கவேண்டியிருக்கிறது. பயனீட்டாளர்கள் செலுத்தும் அந்தக் கட்டணம் அடிக்கடி மாறும்.

தற்போது அது, ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைவிட அதிகமாக இருக்கிறது.

எரிபொருள் விலை கணிசமான அளவு கூடியது

போர் தொடங்குவதற்கு முன்பு, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் விமானங்களுக்கான எரிபொருள் விலை ஒரு பீப்பாய் அளவுக்கு 85 டாலராக (108 வெள்ளி) இருந்தது. கடந்த மார்ச் மாத இறுதியில் அந்த விலை ஏறத்தாழ 200 டாலராக இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஈரான் போர் தொடங்கிய பிறகும் மார்ச் மாதம் தாங்கள் வலுவான வளர்ச்சியைச் சந்தித்ததாக ஃபெட்எக்ஸ் தெரிவித்தது.

இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நிலத்தில் பயன்படுத்தப்படும் தங்களின் விநியோக வாகனச் சேவைகளுக்கான எரிபொருள் செலவு 25 விழுக்காடு அதிகரித்ததாக டிஎச்எல் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அதேவேளை, கடந்த சில ஆண்டுகளாகத் தாங்கள் அதிக அளவில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி வருவதால் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் எரிபொருளைச் சார்ந்திருப்பது குறைந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

உலகத் தளவாடச் சேவை நிறுவனமான ஜே&டி எக்ஸ்பிரஸ், சந்தை நிலவரம் உட்பட நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. பெட்ரோல் பயன்பாட்டினால் ஏற்படும் செலவுகளைத் தாங்கள் சமாளித்து வருவதாகவும் அந்நிறுவனம் கூறியது.

செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாவதாக அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்