சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானச் சிப்பந்தி ஒருவர், விமானம் ஒன்றில் வழுக்கி கீழே விழுந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, $1 மில்லியனுக்கு மேல் இழப்பீடு கோரி அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கை சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2019 செப்டம்பர் 5ஆம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த ஏ350 ரக விமானத்தில் துரைராஜ் சந்திரன், 35, பணியாற்றிக் கொண்டிருந்தார்.
ஏறக்குறைய 17 மணி நேரம் நீடித்த பயணத்தில் அந்த விமானம் சிங்கப்பூரை நெருங்கிக் கொண்டிருந்தபோது தாம் கீழே விழுந்ததில் முதுகுப்பகுதியில் அடிபட்டதாக துரைராஜ் கூறினார்.
இனி சிப்பந்தியாக தம்மால் வேலை செய்ய முடியாது என்பதால் துரைராஜ் வழக்குத் தொடுத்தார்.
பாதுகாப்பான வேலை முறையையும் பணிபுரிவதற்குப் பாதுகாப்பான வேலையிடத்தையும் வழங்க எஸ்ஐஏ தவறிவிட்டதாக திரு துரைராஜ் வாதிட்டார்.
ஆனால் அதை நீதிபதி ஏற்க மறுத்தார்.
“துரைராஜ் வழுக்கி கீழே விழு காரணமாகச் சொல்லப்பட்ட ‘கிரீஸ்’ போன்ற பொருள் தரையில் இல்லை. மற்ற சிப்பந்திகளிடமும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. பாதுகாப்பான வேலை முறையை, விதிமுறைகளை எஸ்ஐஏ மீறவில்லை,” என்று நீதிபதி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியரான துரைராஜ் 2016 முதல் 2021 வரை எஸ்ஐஏவில் பணியாற்றினார். அவர் மாதம் 6,058 வெள்ளி ஊதியமாகப் பெற்றுவந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.