தேர்தல் அதிகாரிகளை மிரட்டுவதை நிறுத்துக: டிரம்ப் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் அதிகாரிகளை மிரட்டுவதை நிறுத்துக: டிரம்ப் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

படம்: ஏஎஃப்பி

31 Oct 2026 - 4:57 pm

2 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியுரிமை இல்லாதவர்கள் வாக்களிப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில், அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் நிபந்தனைகளுக்கு உட்படாத தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு அந்நாட்டு நீதித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட குழுக்கள் தொடுத்த வழக்கில், அக்டோபர் 30ஆம் தேதி மாவட்ட நீதிபதி ட்ரினா தாம்சன் இந்தத் தற்காலிகத் தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவுள்ள முக்கிய இடைத்தவணைத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் வேளையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையிலும் செனட் அவையிலும் ஆளும் குடியரசுக் கட்சியினர் சொற்பப் பெரும்பான்மை கொண்டுள்ளனர். இருப்பினும், மக்களவையைக் கைப்பற்ற ஜனநாயகக் கட்சியினருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு, வாக்காளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கடுமையான விதிமுறைகள் தேவை எனக் கூறி, வாக்காளர் பதிவுத் தகவல்களைத் தருமாறு மாநிலங்களை டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக வலியுறுத்தி வந்தது. ஆனால், ஒத்துழைக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்போவதாக மிரட்டியதன் மூலம் நீதித்துறை வரம்பு மீறிவிட்டது என்று நீதிபதி சுட்டினார்.

தேர்தலுக்குச் சில நாள்களே எஞ்சியுள்ளதால், தேர்தல் சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் செயல்படுத்துவதே பொது நலனுக்கு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட நீதிபதி தாம்சன், டிரம்ப் நிர்வாகப் பட்டியலின்படி வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்கவோ வாக்களிக்க மறுக்கவோ வாக்குகளைத் தனித்துப் பிரிக்கவோ கூடாது என உத்தரவிட்டார்.

அரசியல் வல்லுநர்களும் தேர்தல் அதிகாரிகள் சிலரும் இதனை எல்லை மீறிய கூட்டரசு நடவடிக்கையாகக் கருதுகின்றனர். இடைத்தவணைத் தேர்தலில் கூட்டரசுத் தலையீடு ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் சிலர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

இதற்கு நீதித்துறை உடனடியாகப் பதிலளிக்கவில்லை. இதற்குமுன், 2020ஆம் ஆண்டுத் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ளாதது உட்பட பல தவறான கூற்றுகளை டிரம்ப் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்