மின்னணு, அறைகலன் விற்பனையாளரான கோர்ட்ஸ் நிறுவனத்திற்கு, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதித்த பிணைநிரல் தாக்குதலுக்காக $178,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது, 2019 ஜனவரி முதல் தரவுப் பாதுகாப்புக் கடமைகளை அந்நிறுவனம் மீறும் மூன்றாவது முறையாகும்.
ஆகஸ்ட் 11ஆம் தேதியிட்டு, அக்டோபர் 26ஆம் தேதி அதன் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு ஆணையத்தின் முடிவின்படி, செப்டம்பர் 2022ல் நடந்த இந்தத் தாக்குதல் 946,972 பேரைப் பாதித்தது. இதில் 941,513 வாடிக்கையாளர்களும் 5,459 இந்நாள், முன்னாள், வருங்கால ஊழியர்களும் அடங்குவர்.
பாதிக்கப்பட்ட மிகவும் முக்கியமான தகவல்களில் ஊழியர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், அவர்களின் கடன் தகுதி குறித்த தகவல்களும் அடங்கும். வாடிக்கையாளர்களின் தரவுகளில் பெயர்கள், அடையாள அட்டை எண்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள், சிலரின் கடன் அட்டை எண்களின் கடைசி நான்கு இலக்கங்கள் ஆகியவை அடங்கும்.
தாக்குதல் நடத்தியவர், கோர்ட்சின் முக்கிய அமைப்புகள் செயலிழந்தால் அதன் வணிகத்தைத் தொடர்ந்து இயங்க வைப்பதற்காக உருவாக்கப்பட்ட பேரிடர் மீட்பு இணையச் சேவையகங்கள் வழியாக, 2022 செப்டம்பர் வாக்கில் அதன் கட்டமைப்பில் ஊடுருவியதாகக் கூறப்படுகிறது.
இந்த மீட்புச் சேவையகங்களில் இரண்டு, இணையம் வழியாக அணுகக்கூடியவையாக இருந்தன. தாக்குதல் நடத்தியவர், கட்டமைப்பில் எளிதில் ஊடுருவக்கூடிய நுழைவுப் புள்ளிகளைத் தேடி, மீண்டும் மீண்டும் அணுக முயன்றதாகவும், பின்னர் அறியப்படாத வழிகளில் ஒரு கணினி நிர்வாகியின் உள்நுழைவுச் சான்றுகளைப் பெற்றதாகவும் விசாரணைகள் சுட்டிக்காட்டின.
பேரிடர் மீட்பு இணையச் சேவையகங்களுக்கும் கோர்ட்ஸ் கட்டமைப்பின் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான இணைப்புகள், தாக்குதல் நடத்தியவர் மற்ற அமைப்புகளை அடைய வழிவகுத்தன.
26 இணையச் சேவையகங்களில் பிணைநிரல் நிறுவப்பட்டு, 20 இணையச் சேவையகங்களில் உள்ள தரவுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைகுறியாக்கம் செய்யப்பட்டன. கோர்ட்ஸ் நிறுவனம் செப்டம்பர் 26ஆம் தேதி வாக்கில் இந்தப் பிணைநிரலைக் கண்டறிந்தது.
தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட பலவீனங்களைக் கண்டறிந்து சரிசெய்திருக்கக்கூடிய பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்ளத் தவறியதை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு ஆணையம் சுட்டிக்காட்டியது.
