சிங்கப்பூர் அதிகாரிகள் அண்மையில் அதிகரித்துள்ள கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களைக் கண்காணித்துவருவதாகத் தெரிவித்துள்ளனர்.
முந்தைய கிருமி வகையுடன் ஒப்புநோக்க உள்ளூரில் பரவும் கிருமி எளிதில் தொற்றக்கூடியது அல்லது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
ஏப்ரல் 27லிருந்து மே 3 வரை கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14,200ஆக இருந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் அது கிட்டத்தட்ட 11,100ஆக இருந்தது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கையும் 102லிருந்து 133க்குக் கூடியதாக சுகாதார அமைச்சும் தொற்றுநோய் நிலையமும் செவ்வாய்க்கிழமை (மே 13) கூட்டறிக்கையில் குறிப்பிட்டன.
இருப்பினும், தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் சராசரி எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டுக்குக் குறைந்தது.
“தொற்றுச் சம்பவங்களின் அதிகரிப்பு மருத்துவமனைகளால் தற்போது சமாளிக்கக்கூடிய நிலையில் உள்ளன,” என்ற சுகாதார அமைச்சும் தொற்றுநோய் நிலையமும், “ஆண்டு முழுதும் அவ்வப்போது கொவிட்-19 சம்பவங்கள் தலைதூக்கக்கூடும்” என்றும் கூறின.
அதே கருத்தைச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
“முக்கியமான விவகாரம் என்னவென்றால் நமது சுகாதாரக் கட்டமைப்பால் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க முடியும்,” என்றார் திரு ஓங்.
தொடர்புடைய செய்திகள்
தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்ததற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றபோதும் நோய் எதிர்ப்பு சமூகத்தில் குறைந்துவருவது ஒரு காரணமாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சு சொன்னது.
சிங்கப்பூரில் தற்போது கண்டறியப்பட்ட கொவிட்-19 தொற்றானது எல்எஃப்.7 (LF.7), என்பி.1.8 (NB.1.8) ஆகிய கிருமி வகைகளைச் சேர்ந்தது. மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோர் அந்தக் கிருமி வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 தொற்றால் கடுமையாகப் பாதிக்கக்கூடிய அபாயத்தில் உள்ளோர் அண்மைய தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும்படி அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர். கடந்த முறை போட்டுக்கொண்ட தடுப்பூசிக்குமேல் கூடுதலாக ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்படி அவர்கள் ஊக்குவிக்கின்றனர்.
மூத்தோர், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், மருத்துவத் தேவையுள்ளோருடன் இருப்போர் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதற்கிடையே, ஆறு மாதத்துக்குமேல் உள்ள குழந்தைகளும் பெரியவர்களும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.