2026ஆம் ஆண்டில் மத்திய சேம நிதியில் ஒருசில மாற்றங்கள் நடப்புக்கு வர உள்ளன.
ஓய்வுக்காலத்தில் நிம்மதியான வாழ்க்கைக்குப் போதுமான நிதி இருப்பதை உறுதி செய்ய அந்த மாற்றங்களை அரசாங்கம் செய்கிறது.
மசே நிதி சாதாரண சம்பள உச்சவரம்பு $7,400 என்பதிலிருந்து 2026 ஜனவரி 1 முதல் $8,000ஆக அதிகரிக்கும். இவ்வாண்டு ஜனவரியில் அந்தத் தொகை $7,400க்கு உயர்த்தப்பட்டது.
ஒரு மாதத்தில் ஊழியர் அனைவரின் மசே நிதிப் பங்களிப்புகளுக்குக் கணக்கிடப்படும் சம்பளத்திற்கான அதிகபட்ச வரம்பை இந்த மாற்றம் கட்டுப்படுத்தும்.
மாற்றங்களுக்கேற்ப முதலாளிகளும் ஊழியர்களும் தங்களது நிலையை அமைத்துக்கொள்ள அனுமதிக்கும் வகையில் மாதச் சம்பள உச்சவரம்பில் 2023 செப்டம்பர் 1 முதல் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதில் செய்யப்படும் ஆக அண்மைய மாற்றமே இந்த $600 உயர்வு.
உயரும் சம்பள அளவிற்கு ஏற்ப இந்த உச்சவரம்பு அதிகரிக்கப்படுகிறது.
இருப்பினும், மசே நிதி வருடாந்திர சம்பள உச்சவரம்பு மாற்றமின்றி $102,000 எனத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மசே நிதிப் பங்களிப்புகளுக்கான ஓராண்டின் அதிகபட்ச சம்பளத் தொகை இது. இதில் ஊழியர்களின் சாதாரண ஊதியமும் கூடுதல் ஊதியமும் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
அதேவேளை, பங்களிப்புகளுக்கான மசே நிதி வருடாந்திர வரம்பிலும் மாற்றம் இராது. தற்போதைய $37,740 என்பதே வரும் ஆண்டிலும் தொடரும்.
2026ஆம் ஆண்டில் அறிமுகமாக இருக்கும் இன்னொரு மாற்றம், மூத்த ஊழியர்களுக்குக் கூடுதல் மசே நிதிப் பங்களிப்பு.
55 வயது முதல் 60 வயது வரையிலானவர்களுக்கான பங்களிப்பு தற்போது 32.5 விழுக்காடாக உள்ளது. 2026 ஜனவரி 1 முதல் அது 34 விழுக்காடாக அதிகரிக்கும்.
அந்த வயதுகளில் உள்ள ஊழியர்களின் பங்களிப்பு 17 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காட்டுக்கு அதிகரிக்கும்.
அதேபோல, 60 வயது முதல் 65 வயது வரையிலான மூத்தோருக்குரிய மசே நிதிப் பங்களிப்பு, அவர்களின் மொத்த சம்பளத் தொகையின் 23.5 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயரும்.
அந்த வயதுவரம்பில் உள்ள ஊழியர்கள் தற்போது செலுத்தும் 11.5 விழுக்காடு பங்களிப்பு 12.5 விழுக்காடாக அதிகரிக்கும்.
ஆக, 55 வயதிலிருந்து 65 வயது வரை உள்ள ஊழியர்கள் தங்களது மாதச் சம்பளத்திலிருந்து கூடுதலாக ஒரு விழுக்காட்டைத் தங்களது பங்களிப்புக்குச் செலுத்த வேண்டி இருக்கும்.
அடுத்ததாக, 2026ஆம் ஆண்டில் 55 வயதைத் தொடுவோருக்கான முழு ஓய்வுகாலத் தொகை (FRS) 3.5 விழுக்காடு அதிகரிக்கப்படும்.
தற்போது $213,000ஆக இருக்கும் அந்தத் தொகை 2026ல் $220,400க்கு அதிகரிக்கும்.

