அடுத்த ஆண்டு ஜனவரி பிற்பாதியில் 55 வயதைத் தாண்டியவர்களுக்கு சிறப்புக் கணக்கு மூடப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பிற்பாதியிலிருந்து 55 வயதைத் தாண்டியோருக்கான மத்திய சேம நிதி சிறப்புக் கணக்கு மூடப்படும். அதேவேளை, இணையவழி ஊழியர்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஓய்வுகாலத் தொகை அதிகரிக்கப்படும், அவர்களுக்கான மத்திய சேமநிதிப் பங்களிப்பும் உயர்த்தப்படும்.
மேலும், இணையவழி ஊழியர்களுக்கான மத்திய சேம நிதிக்கான மாதச் சம்பள உச்சவரம்பு உயர்த்தப்படும். சம்பளங்கள் உயர்த்தப்படுவதற்கு ஏற்ப அவர்களுக்கு ஆதரவளிப்பது இந்த மாற்றத்தின் இலக்காகும்.
வரும் ஜனவரி மாதம் பிற்பாதியிலிருந்து சம்பந்தப்பட்ட மத்திய சேம நிதித் திட்ட உறுப்பினர்களின் சிறப்புக் கணக்குகளில் இருக்கும் தொகை அவர்களின் ஓய்வுகாலக் கணக்கிற்கு மாற்றப்படும். அதிகபட்ச ஓய்வுகாலத் தொகை வரை அக்கணக்கில் நிரப்பப்படும்.
சிறப்புக் கணக்குகளில் எஞ்சியிருக்கும் தொகை அவர்களின் சாதாரண கணக்குகளுக்கு மாற்றப்படும். அந்தத் தொகையை அவர்கள் வெளியே எடுக்கலாம் அல்லது தங்கள் ஓய்வுகாலக் கணக்கிற்கு மாற்றலாம்.
சம்பந்தப்பட்டோரின் மத்திய சேம நிதி ஓய்வுகாலக் கணக்கில் இருக்கும் பணத்துக்குத் தொடர்ந்து நீண்டகாலத்துக்கான அதிக வட்டி விகிதம் வழங்கப்படும், ஓய்வுகாலத்தில் அவர்களுக்கு மாதந்தோறும் கூடுதல் தொகை வழங்கப்படும் என்று மத்திய சேம நிதிக் கழகம் திங்கட்கிழமையன்று (டிசம்பர் 16) தெரிவித்தது.
மத்திய சேம நிதி சிறப்புக் கணக்கு மூடப்பட்ட பிறகு அவற்றுக்குச் சொந்தமானவர்கள், மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் மூலமாகவும் தாள் ஆவண வடிவிலும் தெரியப்படுத்தப்படுவர்.
ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து மேம்படுத்தப்பட்ட ஓய்வுகாலத் தொகை 426,000 வெள்ளிக்கு உயர்த்தப்படும். அத்தொகை, அடிப்படை ஓய்வுகாலத் தொகையில் மும்மடங்குக்குப் பதிலாக நான்கு மடங்காக இருக்கும். 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மசேநிதி உறுப்பினர்கள், அதிக மாதாந்திர ஓய்வுகால நிதியைப் பெறுவதற்கு தங்கள் ஓய்வூதியக் கணக்கில் நிரப்புவதற்கு இதுவே அதிகபட்சத் தொகையாக இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
426,000 வெள்ளி வரை தங்களின் மத்திய சேம நிதி ஓய்வுகாலக் கணக்கில் நிரப்புவோர் 65 வயதைத் தாண்டிய பிறகு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் சுமார் 3,330 வெள்ளி பெறுவர்.
தற்போது மத்திய சேம நிதி ஓய்வுகாலக் கணக்கில் அதிபகட்சமாக 308,700 வெள்ளியை மட்டுமே நிரப்ப முடியும். அந்த வகையில், சம்பந்தப்பட்டோருக்கு 65 வயதைத் தாண்டிய பிறகு மாதந்தோறும் சுமார் 2,530 வெள்ளி மட்டுமே வழங்கப்படும்.
ஜனவரி ஒன்றாம் தேதி முதல், மத்திய சேம நிதிக்கான மாதச் சம்பள உச்சவரம்பு 7,400 வெள்ளிக்கு உயர்த்தப்படும். அதேவேளை, ஓராண்டுக்கான சம்பள உச்சவரம்பு தொடர்ந்து 102,000 வெள்ளியாக இருக்கும்.
மேலும், மூத்த ஊழியர்களுக்கான மத்திய சேம நிதி பங்களிப்பு விகிதம் அதிகரிக்கப்படும். ஓய்வுகாலத்தில் அவர்களுக்குப் போதுமான ஆதரவு இருப்பதை உறுதிசெய்வது இந்த மாற்றத்தின் நோக்கமாகும்.