மத்திய சேம நிதி உறுப்பினர்கள் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் தங்களது சிறப்பு, மெடிசேவ், ஓய்வுக்காலக் கணக்குகளுக்கு ஆண்டிற்கு 4.14 விழுக்காடு வட்டியைப் பெறுவர்.
2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அக்கணக்குகளுக்கு 4.08 விழுக்காடு வட்டி வழங்கப்படுகிறது.
மசே நிதி சாதாரணக் கணக்குகளுக்கான வட்டியானது ஆண்டிற்கு 2.5 விழுக்காடு என்ற விகிதத்திலேயே தொடர்கிறது.
அதேபோல, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுக் கடனுக்கான வட்டி 2.6 விழுக்காடு என்ற அளவிலேயே நீடிக்கும்.
முந்திய காலாண்டுகளைப் போலவே, 55 மற்றும் அதற்குமேல் வயதுடைய மசே நிதி உறுப்பினர்கள், தங்களது ஒட்டுமொத்த மசே நிதி இருப்புகளில் முதல் 30,000 வெள்ளிக்கு கூடுதலாக 2 விழுக்காடு வட்டி பெறுவர். சாதாரணக் கணக்கில் அதிகபட்சம் 20,000 வெள்ளிக்கு மட்டுமே இந்தக் கூடுதல் 2 விழுக்காடு வட்டி பொருந்தும். அடுத்த 30,000 வெள்ளிக்கு கூடுதலாக ஒரு விழுக்காடு வட்டி வழங்கப்படும்.
55 வயதிற்குட்பட்ட மசே நிதி உறுப்பினர்கள் தங்களது ஒட்டுமொத்த மசே நிதி கையிருப்பில் முதல் 60,000 வெள்ளிக்குக் கூடுதலாக ஒரு விழுக்காடு வட்டி பெறுவர். இதிலும் சாதாரணக் கணக்கிற்கு 20,000 வெள்ளி என்ற உச்ச வரம்பு பொருந்தும்.
மசே நிதிக் கழகமும் வீவகவும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) வெளியிட்ட கூட்டறிக்கையில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.