லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தில் மயங்கி விழுந்த ஆடவருக்கு முதலுதவி

2 mins read
b6ab41b9-3078-4aa1-937e-886ec573419c
மயங்கி விழுந்த ஆடவரைச் சுற்றி பயணிகள் சிலரும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிலைய ஊழியர்களும் நின்றனர். அந்த ஊழியர்களில் சிலர் கையுறை அணிந்திருந்தனர். - ஜார்ஜி ஷேடி/டிக்டாக்

லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தில் வெள்ளிக்கிழமை (மே 9) ஆடவர் ஒருவர் தளமேடையில் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, முதலுதவியாளர்கள் அவருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளித்தனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர்கள் பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

எண் 60 புக்கிட் தீமா சாலையில் வெள்ளிக்கிழமை மாலை 5.10 மணியளவில் தனக்கு உதவி கோரி அழைப்பு வந்ததாக மதர்ஷிப் செய்தித்தளத்திடம் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இது. லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தின் முகவரியாகும்.

வேலை முடிந்து வீடு திரும்பியபோது அச்சம்பவத்தை தாம் கண்டதாகக் கூறிய டிக்டாக் பயனர் ஒருவர், அதைப் படமெடுத்தார்.

தளமேடை கதவுகளுக்குப் பக்கத்தில் தரையில் கிடக்கும் ஆடவர் ஒருவருக்கு கறுப்பு நிற சட்டை அணிந்திருக்கும் மாது சிபிஆர் சிகிச்சை அளிப்பது அக்காணொளியில் தெரிந்தது.

அந்த ஆடவரைச் சுற்றி பயணிகள் சிலரும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிலைய ஊழியர்களும் நின்றனர். அந்த ஊழியர்களில் சிலர் கையுறை அணிந்திருந்தனர்.

குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்துக்கு வரும்வரை அந்த ஆடவருக்கு முதலுதவியாளர்கள் மாறி மாறி சிபிஆர் சிகிச்சை அளித்ததாக காணொளிப் படவிளக்கத்தில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், மதர்ஷிப்பின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்பிஎஸ் டிரான்சிட் பேச்சாளர் கிரேஸ் வூ, பயணிகளுக்கு உதவும் ஆற்றலைப் பெற்றிருப்பதை உறுதிசெய்ய எஸ்பிஎஸ் டிரான்சிட் முன்களப் பணியாளர்கள் விரிவான பயிற்சிக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

சிபிஆர் போன்ற உயிர்காக்கும் திறன்களைப் பெற்றிருப்பதும் ஏஇடி கருவிகளைப் பயன்படுத்த தெரிந்திருப்பதும் அதில் அடங்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்