தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயர்கல்வி நிலையங்களில் மின்சிகரெட் முறியடிப்பு நடவடிக்கை; ஒருவர் பிடிபட்டார்

2 mins read
7d1e6c9c-fd97-4820-9a5b-75a4b4d54275
சிங்கப்பூர் மின்சிகரெட் முறியடிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஆறு உயர்கல்வி நிலையங்களில் சுகாதார அறிவியல் ஆணையமும் கல்வி அமைச்சும் மேற்கொண்ட மின்சிகரெட் முறியடிப்பு நடவடிக்கையில் ஆடவர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டது. பிடிபட்ட 24 வயது ஆடவரிடம் இரண்டு மின்சிகரெட்டுகளும் 10 மின்சிகரெட் தொடர்பான பொருள்களும் இருந்தன.

கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் தேதியிலிருந்து 29ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த முறியடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஆடவருக்குப் பிடிபட்ட இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது. அவரிடம் இருந்த மின்சிகரெட்டுகள், மின்சிகரெட் தொடர்பான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ன.

வியாழக்கிழமை (அக்டோபர் 2) கூட்டறிக்கை மூலம் அதிகாரிகள் இத்தகவல்களை வெளியிட்டனர் என்று சிஎன்ஏ ஊடகம் தெரிவித்துள்ளது.

உயர்கல்வி நிலையங்களில் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் முதல்முறைக் குற்றவாளிகளுக்கு அந்தந்த நிலையங்கள் அபராதம் விதிக்கலாம், அவர்களுக்குச் சமூக சேவை உத்தரவு விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், அவர்கள் மாணவர் தங்குவிடுதிகளிலிருந்து நீக்கப்படலாம், அவர்களுக்கு வழங்கப்படும் விருதுகள், உபகாரச் சம்பளம் போன்ற சலுகைகள் மீட்டுக்கொள்ளப்படலாம்.

ஒருமுறைக்கு மேல் இக்குற்றத்தைப் புரிவோர் தற்காலிகமாகக் கல்வி நிலையத்திலிருந்து நீக்கப்படக்கூடும். அதேநேரம், எட்டோமிடேட் கலந்த கேபோட் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் மாணவர்கள் நிலையத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்படலாம்.

சுகாதார அறிவியல் ஆணையமும் கல்வி அமைச்சும் சேர்ந்து நடத்திய இந்த முறியடிப்பு நடவடிக்கையில் வரி கட்டப்படாத சிகரெட்டுகள் ஐவரிடம் இருந்ததும் தெரியவந்தது. அவர்கள் 20லிருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மேல்விசாரணைக்காக அவர்கள் சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய ஆறு உயர்கல்வி நிலையங்களில் கட்டங்கட்டமாகக் இந்தக் கூட்டு முறியடிப்பு நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்