வளர்ச்சிக்கு இடையே நல்ல வேலைகள் உருவாக்கப்படுவது உறுதிசெய்யப்படும்: பிரதமர் வோங்

வளர்ச்சிக்கு இடையே நல்ல வேலைகள் உருவாக்கப்படுவது உறுதிசெய்யப்படும்: பிரதமர் வோங்

1 mins read
0902c1af-ccbf-4897-8cc9-69ea6cddbace
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அக்கறை தெரிவித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பொருளியல் வளர்ச்சிக்கு இடையே நல்ல வேலைகள் உருவாக்கப்படுவது உறுதிசெய்யப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவரும் நிலையில் வேலைகளற்ற வளர்ச்சி இருக்காது என்றார் அவர்.

“பொருளியல் வளர்ச்சிக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எவ்வாறு கைகொடுக்கும் என்பதை ஆராய்வோம். வளர்ச்சி, நல்ல வேலைகளை உருவாக்குவதோடு கூடுதல் சம்பளங்களையும் பெற்றுத்தரும் என்பதை உறுதிசெய்வோம்,” என்று திரு வோங் தெரிவித்தார். வரவுசெலவுத் திட்டம் 2026 குறித்த விவாதத்தை நிறைவுசெய்து வைத்து அவர் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) பேசினார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்துவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அக்கறை தெரிவித்திருந்தனர். ஊழியர்களின் பயிற்சிகளுக்குக் குறைவாக முதலிடும் நிலை ஏற்படக்கூடும், ஊழியரணியில் மூத்த ஊழியர்கள் மீண்டும் இணைவது மேலும் சிரமமாகக்கூடும், ஆரம்பநிலை வேலைகள் பறிபோகக்கூடும் என்று அவர்கள் கூறியிருந்தனர்.

மன்ற உறுப்பினர்களின் அக்கறைகளைப் புரிந்துகொள்ள முடிவதாகத் திரு வோங் தெரிவித்தார். பாதகமான விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க அரசாங்கம் முன்கூட்டியே செயல்படும் என்று பிரதமர் உத்தரவாதம் தந்தார்.

“மக்கள் மீது நாங்கள் மிகவும் நேர்த்தியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்வோம்,” என்றார் திரு வோங். தொழில்துறை உருமாற்றத்தையும் ஊழியரணி மேம்பாட்டையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் தேசியச் செயற்கை நுண்ணறிவு மன்றம் நிறுவப்படுவதை அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்