தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடலில் தத்தளித்தவரைக் காப்பாற்றிய சொகுசுக் கப்பல் மாலுமிகள்

1 mins read
0f1d5128-2e60-4766-a7d7-ff76b1f4302c
ஜென்டிங் ட்ரீம் சொகுசுக் கப்பல். - படம்: ஷின் மின்

மலாக்கா நீரிணையில் தத்தளித்த ஒருவரை ‘ஜென்டிங் டிரீம்’ சொகுசுக் கப்பலில் இருந்த பணியாளர்கள் புதன்கிழமை (செப்டம்பர் 3) மீட்டுள்ளனர்.

புதன்கிழமை காலையில் மலாக்கா நீரிணையில் ஒரு சிறிய படகு தத்தளிப்பதை சிங்கப்பூரிலிருந்து புக்கெட்டுக்கு மூன்று இரவு பயணத்தை மேற்கொண்டிருந்த அக்கப்பலின் மாலுமிகள் பார்த்ததாக ட்ரீம் க்ரூஸ் வெளியிட்ட அறிக்கை கூறியது.

“படகில் இருந்தவர் உதவி கேட்டு சமிக்ஞையை காட்டினார். கப்பல் பணியாளர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்,” என்று அது கூறியது.

படகில் இருந்தவர் பாதுகாப்பாக கப்பலுக்கு அழைத்துவரப்பட்டார். அவருக்கு உணவு, நீர் வழங்கப்பட்டதுடன், கப்பலின் மருத்துவக் குழுவினர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அவர் தற்போது நல்லநிலையில் உள்ளதாகவும் அவருக்கு கவனிப்பு வழங்கப்படுவதாகவும் ட்ரீம் க்ரூஸ் கூறியது.

அவரைப் பாதுகாப்பாக கரைக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பதாகவும் அது கூறியது.

“கடலில் பாதுகாப்பை உறுதி செய்வது எங்கள் முதன்மையான கடமை,” என்று ஸ்டார்ட்ரீம் க்ரூசின் தலைவர் மைக்கேல் கோ கூறினார்.

வெற்றிகரமாக மீட்புப் பணியை மேற்கொண்ட கப்பல் தலைவர், பணியாளர்களின் விழிப்புநிலையையும் நிபுணத்துவத்தையும் குறித்து பெருமைப்படுவதாகவும் அவர் சொன்னார்.

ட்ரீம் க்ரூஸஸ், ஸ்டார்க்ரூஸஸ் ஆகியவை ஸ்டார்ட்ரீம் க்ரூசின் கீழ் உள்ள இரு நிறுவனங்களாகும். அதன் முதன்மைக் கப்பலான ஜென்டிங் ட்ரீம் மலேசியா, தாய்லாந்து பயணங்களை வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்