தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெலிகிராம் செயலிவழிஇயங்கும் குற்றக் கும்பல்கள்

2 mins read
6c8b57cd-a594-4a2d-bbb5-71a9fa8166f9
தென்கிழக்கு ஆசிய மோசடி கும்பல்கள் டெலிகிராம் செயலியை சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகின்றன. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சக்திவாய்ந்த குற்றவியல் கட்டமைப்புகள் டெலிகிராம் செயலியின் பின்னணியில் செழிப்புடன் செயல்பட்டு வருகின்றன.

திட்டமிட்டு செயல்படும் குற்றச்செயல் கும்பல்கள், பெரிய அளவில் சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இந்தச் செயலி அடிப்படையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று ஐக்கிய நாட்டு நிறுவன அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

டெலிகிராம் செயலியில் குற்றச்செயல் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுவதாகக் கூறி பிரான்சின் புதிய கடுமையான சட்டத்தின்படி அச்செயலியின் உரிமையாளர் பாவெல் டுரோவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, ஐநாவின் அறிக்கை வெளியாகியுள்ளது.

கடன் அட்டை விவரங்கள், மறைச்சொல், இணையப் பக்கங்களைப் பயன்படுத்திய விவரங்கள் உள்ளிட்டவை ஊடுருவப்பட்டு செயலில் வெளிப்படையாக விற்கப்படுவதாக போதை, குற்றச்செயலுக்கான ஐநா அலுவலகம் (United Nations Office for Drugs and Crime: யுஎன்ஓடிசி) தெரிவித்தது.

இத்தகைய ஊடுருவல்களுக்கு மோசடிச் செயல்களுக்காக உருவாக்கப்பட்ட வன்போலி (deepfake) உள்ளிட்ட மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

“ஒரு நாளில் வெளிநாடுகளில் திருடப்பட்ட மூன்று மில்லியன் மின்னிலக்க நாணயத்தை மாற்றுகிறோம்,” என்று சீன மொழியில் உள்ள ஒரு விளம்பரத்தை அறிக்கை உதாரணமாகச் சுட்டிக்காட்டியது.

உலகம் முழுவதும் மோசடி செய்து பணம் பறிக்கும் பல பில்லியன் டாலர் தொழிலுக்கு தென்கிழக்கு ஆசியா மையமாக உருவாகியிருக்கிறது.

பெரும்பாலான சீனக் கும்பல்கள் கடத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபடுகின்றன.

இந்த மோசடித் தொழில் துறையில் ஆண்டுக்கு 27.4 பில்லியன் டாலர் முதல் 35.5 பில்லியன் டாலர் வரை ஈட்டப்படுகிறது என்று யுஎன்ஓடிசி அறிக்கை தெரிவித்தது.

ரஷ்யாவில் பிறந்த டெலிகிராம் செயலியின் உரிமையாளர் டுரோவ் கடந்த ஆகஸ்ட் மாதம் பாரிஸ் நகரில் கைது செய்யப்பட்டார். அவரது செயலியில் குற்றச்செயல்கள் அனுமதிக்கப்படுவதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. சிறார் பாலியல் புகைப்படங்களை பகிர்வதும் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்