புலாவ் உபின் தீவுக்கு அருகில் அண்மையில் பெரிய முதலைகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தேசிய பூங்காக் கழகம், நீர்நிலைகளின் ஓரங்களில் மக்கள் இருக்கும்போது கவனமாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து புலாவ் உபின் தீவில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமையன்று (ஏப்ரல் 1) வெளியிடப்பட்ட அறிக்கையில், தேசியப் பூங்காக் கழகத்தின் வனவிலங்கு நிர்வாகத்தின் குழும இயக்குநரான திரு ஹோ சூன் பெங், புலாவ் உபின் பகுதியில் முதலைகள் காணப்பட்டதை கழகம் அறிந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவை ஜோகூர் நீரிணைப் பகுதியில் காணப்படும் ‘எஸ்டுவரின்’ முதலை வகையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
கழகத்தின் இணையத்தளத்தின்படி, இவ்வகை முதலை உலகிலேயே மிகப் பெரிய முதலை இனமாகும்.
‘கடல்நீர் முதலை’ என்றும் அழைக்கப்படும் இவ்வகை முதலை, 7 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. நீண்ட மூக்கு மற்றும் தடிப்புகளைக் கொண்ட அகலமான, தசைநார் வலிமைமிக்க வால் இதன் அடையாளங்களாகும்.
இவை பெரும்பாலும் மீன்களை உணவாகக் கொள்கின்றன. இருப்பினும், இவற்றின் உணவில் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் அழுகிய இறைச்சிகளும் அடங்கும். இவை நிலத்திலும் நீரிலும் குறுகிய தூரத்திற்கு மிக வேகமாக நகரக்கூடியவை.
தொடர்புடைய செய்திகள்
புலாவ் உபின் குடியிருப்பாளர்கள் சதுப்புநிலங்கள் மற்றும் சேற்றுப் பகுதிகளில் இந்த முதலைகளைக் கண்டதாக புதன்கிழமையன்று (மார்ச் 31) சீனமொழி நாளிதழான ‘லியான்ஹே சாவ்பாவ்’ வெளியிட்டது.
தீவில் அவ்வப்போது முதலைகள் தென்படுவது வழக்கமென்றாலும், கடந்த ஒரு மாதத்தில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடந்துள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசியப் பூங்காக் கழகம் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் நீர் சார்ந்த நடவடிக்கைகளைத் திட்டமிடும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய அமைப்புகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் திரு ஹோ கூறினார்.
யாராவது முதலையை நேரில் பார்க்க நேரிட்டால் அமைதியாக இருந்து பின்வாங்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
“யாரும் அந்த விலங்கை நெருங்கவோ, தூண்டவோ அல்லது அதற்கு உணவளிக்கவோ கூடாது,” என்று அவர் கூறினார்.
முதலைகளைப் பார்த்தால் அது குறித்து தகவல் தெரிவிக்க 1800-476-1600 என்ற எண்ணில் கழகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

