சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நிறுவனங்களுக்கான எல்லை தாண்டிய கார் போக்குவரத்துச் சேவைகளை (chartered car rides) வழங்குவதற்கு அனுமதி கிடையாது.
அப்படியிருந்தும் அத்தகைய சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அண்மைக் காலமாக இதன் தொடர்பில் அமலாக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடக்கப்பட்டன.
கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி லிமோசின் (limousine) சொகுசு கார் சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான ‘டொயோட்டா நோவா’ கார் ஒன்றை துவாஸ் இரண்டாம் இணைப்பில் மலேசிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அமெரிக்க நிறுவனம் ஒன்று, சிங்கப்பூரில் பணியாற்றும் தனது ஊழியர்களை ஜோகூர் பாருவில் உள்ள தனது ஆலைக்கு அழைத்துச் செல்ல அந்த லிமோசின் சேவைகளைக் கடந்த ஓராண்டாக நாடியிருக்கிறது.
மலேசியாவில் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு எழுவர் அமரக்கூடிய அந்த காரை திரும்பப் பெறும் நம்பிக்கை கொண்டுள்ளதாக லிமோசின் சேவை நிறுவனத்தின் பேச்சாளர் செப்டம்பர் 18ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். அந்நிறுவனத்தின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.
இந்தப் போக்குவரத்து ஏற்பாடு சட்டபூர்வமானது என்று உறுதியளிக்கப்படும் வரை சில நிறுவனங்கள் தங்கள் முன்பதிவுகளை மீட்டுக்கொண்டுள்ளன. பயணிகளை ஏந்தி சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கும் வெளிநாட்டு வாகனங்களின் ஓட்டுநர்கள் பிடிபட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்நிலை உருவாகியுள்ளது.
எனினும், நிறுவனங்களுடன் தனிநபர்களும் தொடர்ந்து அத்தகைய சேவைகளுக்குப் பதிவு செய்து வருகின்றனர். எல்லை தாண்டிய டாக்சி சேவையைப் பயன்படுத்தி பிறகு உள்ளூர் டாக்சி அல்லது தனியார் வாடகை கார் சேவையைப் பயன்படுத்துவதைவிட அது கூடுதல் வசதியாக இருப்பது அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பிடிபட்ட பிறகு அத்தகைய சேவைகளைத் தொடங்குவதற்கான காரணம் கேட்கப்பட்டதற்கு, தங்கள் வர்த்தகத்தில் அச்சேவை முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அதற்கு இன்னும் கணிசமான அளவு தேவை இருப்பதாகவும் லிமோசின் நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் குறைந்தது ஓர் அரசாங்க நிறுவனமாவது எல்லை தாண்டிய லிமோசின் சேவைகளுக்கு விண்ணப்பிக்கின்றன. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) அதற்காகக் கடந்த மே மாதம் ஒப்பந்தப்புள்ளிகளைக் கேட்டுக்கொண்டது ஓர் உதாரணம்.
தொடர்புடைய செய்திகள்
ஜோகூரில் சட்டவிரோதமாக வாடகை வாகனச் சேவைகளை வழங்கும் சிங்கப்பூர் கார்கள் மீதான அமலாக்க நடவடிக்கைகளை மலேசிய அதிகாரிகள் கடுமையாக்கியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டில் நான்கு சிங்கப்பூர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அத்தகைய சட்டவிரோதப் போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதை முழுமையாக நிறுத்திக்கொண்டுள்ளதாக சில சிங்கப்பூர், மலேசிய நிறுவனங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன. அதேவேளை, வேறு சில அவற்றைத் தொடர்ந்து மறைமுகமாக வழங்கி வருகின்றன.