குறுக்குத் தீவு ரயில் கட்டுமானம்: சத்தத்தைக் கட்டுப்படுத்த அரசாங்க உதவி

குறுக்குத் தீவு ரயில் கட்டுமானம்: சத்தத்தைக் கட்டுப்படுத்த அரசாங்க உதவி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Aug 2026 - 5:23 pm

2 mins read

சிங்கப்பூரில் கட்டப்பட்டுவரும் குறுக்குத் தீவு ரயில் பாதையில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

அப்பணிகளில் சுரங்கத்தின் ஆழமான பகுதியில் அரண்களுக்கான சுவர் எழுப்புவதும் அடங்கும். அது நடக்கும்போது வழக்கத்துக்கும் மாறாக பேரொலி ஏற்படும்.

அந்தப் பெருஞ்சத்தத்தைக் கட்டுப்படுத்தப் பொங்கோலில் கட்டுமானத் தளங்களுக்கு அருகில் உள்ள குடியிருப்பாளர்களுக்குச் சன்னல்களை மறைக்கும் போர்வைகள் இரவலாகவும், காதுகளில் அணியும் ஒலி தடுப்புக்கருவிகள் இலவசமாகவும் வழங்கப்படும்.

இதன் விவரங்களை போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) அவரது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சருமான திருவாட்டி சுன், வாட்டர்வே டெரஸ் 1 குடியிருப்புப் பகுதியில் வாழும் மக்களைக் கட்டுமானத்தின் பேரொலி பாதித்துள்ளதைத் தாம் அறிந்ததாக தமது பதிவில் குறிப்பிட்டார்.

அவரது பதிவோடு இணைக்கப்பட்ட காணொளியில் புளோக் 308 பொங்கோல் வாக் கட்டடம் அருகில் சுரங்கத்துக்குள் சுவர் கட்டப்படுவதால் அதிலிருந்து சத்தம் கிளம்பி, அருகில் உள்ள வீடமைப்புகள் பாதிக்கப்படுவதாக விளக்கமளித்தார்.

சுரங்கத்தில் உருவாக்கப்படும் உட்சுவர், அதனைச் சுற்றியுள்ள மண், அருகில் உள்ள கட்டடங்கள், அதன்மேல் இயங்கும் சாலைகள் ஆகியன சரிந்துவிடாமல் தடுத்து அரணாக அமையும் இன்றியமையாத அமைப்பு என்று தெரிவித்தார்.

அத்தகைய முக்கியக் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை நிலப்போக்குவரத்து ஆணையம் சத்தத்தைத் கட்டுப்படுத்த உதவும் போர்வைகளை இரவல் வழங்கும் என்று அமைச்சர் கூறினார்.

இரண்டு மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் அகலமும் கொண்ட போர்வைகள் ஒலியின் அளவை 15 முதல் 17 ‘டெசிபல்’ என்ற குறியீட்டு அளவுவரை குறைக்க உதவும் என்று அறியப்படுகிறது. அவற்றை வீடுகளில் பொருத்தவும் அகற்றவும் ஆணையம் உதவும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒலியைக் குறைக்க உதவும் போர்வைகள் வெளிச்சத்தை மறைத்து காற்றோட்டத்தை தடுத்துவிடும் தன்மை உடையவை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
எம்ஆர்டிகுறுக்குத்தீவு ரயில் பாதைகுறுக்கு ரயில் பாதைரயில்நிலப் போக்குவரத்து ஆணையம்அமைச்சர்தேசிய வளர்ச்சி அமைச்சுகட்டுமானம்பணிஆர்.கே.சுரேஷ்சுரங்கப்பாதைசுரங்கம்