சிங்கப்பூரும் இந்தியாவும் தங்களது 60 ஆண்டுக்கால நல்லுறவை மேலும் வலுப்படுத்தி, செழிப்புறச் செய்யும் வகையிலும் தங்களுக்கு இடையிலான பங்காளித்துவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இலக்குடனும் பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
பிரதமர் பதவி ஏற்றபின் இந்தியாவுக்கான முதல் அதிகாரத்துவப் பயணத்தை மேற்கொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங் தனது பயணத்தின் நிறைவுநாளான வியாழக்கிழமை (செப்டம்பர் 4) சிங்கப்பூர் - இந்தியா நட்புறவின் அடுத்த அத்தியாயத்தை வடிவமைக்கும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அவ்வகையில், அன்றைய நாளில் சிங்கப்பூர் - இந்தியா இடையே நவீன உற்பத்தித் துறையில் திறன் மேம்பாடு, பசுமை, மின்னிலக்க கடல்வணிக வழித்தடம் எனப் பலத் துறைகள் சார்ந்த ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சிங்கப்பூரின் நிபுணத்துவத்துடன் தமிழ்நாட்டின் சென்னையில் தேசிய உன்னத நிலையத்தை அமைப்பது அவற்றுள் ஒன்று.
மின்னிலக்க சொத்துப் புத்தாக்கம் தொடர்பில் சிங்கப்பூர் நாணய ஆணையம் - இந்திய ரிசர்வ் வங்கி இடையிலான புரிந்துணர்வு, விமானப் போக்குவரத்து தொடர்பில் சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் - இந்திய விமான நிலைய ஆணையம் இடையேயான ஒப்பந்தங்களும் இருநாட்டுப் பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்தாகின.
சிங்கப்பூர் - இந்தியா ஒத்துழைப்பில் எதிர்வரும் காலங்களில் களம்காணவுள்ள இதர திட்டங்கள் விண்வெளி, பசுமை கடல்வணிகம் சார்ந்தவை.
அதன் தொடர்பில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் விண்வெளித் தொழில்நுட்பம், தொழில்துறை மற்றும் இந்தியாவின் தேசிய விண்வெளி மேம்பாட்டு, ஆணைய நிலையம் இடையிலான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தங்கள் விமானப் போக்குவரத்து துறையில் பயிற்சி, ஆய்வு மற்றும் உருவாக்கம், வளர்ந்துவரும் துறைகளான பகுதி மின்கடத்திகள், மின்னணுவியல், விமானப் பராமரிப்பு மற்றும் செம்மையாக்கம், செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பிரிவுகளில் இருநாடுகளும் இணைந்து செயலாற்ற வழிவகுத்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக இருநாட்டுப் பிரதமர்களும் ‘பிஎஸ்ஏ’ மும்பை கொள்கல முனையத்தின் இரண்டாம் கட்டத்தைக் காணொளி வழியாகத் தொடங்கிவைத்தனர்.
இதற்கிடையே, தற்போது வரையிலும் சிங்கப்பூரில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் ஏவியுள்ளதாகச் சுட்டிய பிரதமர் வோங், இருநாடுகளும் இந்தப் பங்காளித்துவத்தை மேலும் விரிவுபடுத்தி, ஒன்றாகச் சாதிக்கக்கூடிய எல்லைகளை விரிவாக்க மேலும் விழைவதாகவும் தெரிவித்தார்.