சிங்கப்பூர், ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்திக் காகங்களைச் சுடும் நடவடிக்கைகளை மார்ச் மாதத்தின் பிற்பாதியிலிருந்து மீண்டும் தொடங்கவிருப்பதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் அறிவித்துள்ளார்.
காகங்களைக் கட்டுப்படுத்த ஆறாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் பலன் அளிக்காததை அடுத்து அதிகாரிகள் அவற்றை ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு சுடுவதற்கான முடிவை எடுத்துள்ளனர்.
காகங்கள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்களும் அதிகரித்துள்ளன என்று ஃபேஸ்புக்கில் திரு சீ, திங்கட்கிழமை (பிப்ரவரி 23) பதிவிட்டார்.
1973ஆம் ஆண்டு காகங்களைச் சுடும் நடவடிக்கைகள் சிங்கப்பூரில் தொடங்கின. ஆனால் ரப்பர் தோட்டாக்கள் அருகில் உள்ள வீடுகளையும் தாக்குவதால் 2020ஆம் ஆண்டு அத்தகைய நடவடிக்கை கைவிடப்பட்டது.
எனினும், பாதுகாப்பு விதிமுறைகளை ஒருசிலர் கடைப்பிடிக்காததால் காகங்கள் தாக்கியதாகக் கூறிய திரு சீ, அத்தகையோர்மீது அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டுகளில் காகங்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதையும் திரு சீ சுட்டினார்.
கடந்த ஆண்டு மட்டும் காகங்கள் தொடர்பாக 15,000 புகார்களை நகரமன்றச் சேவை அலுவலகம் பெற்றது. 2020ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 5,000ஆக இருந்தது என்ற திரு சீ, காகங்கள் ஏற்படுத்தும் இரைச்சல் ஆகியவையும் புகார்களில் அடங்கும் என்றார்.
காகங்கள் தாக்கும் சம்பவங்கள் 2020ஆம் ஆண்டு 460ஆக இருந்தது. கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 2,000ஆக அதிகரித்தது.
தொடர்புடைய செய்திகள்
“காகங்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் தொடர்ந்து பெருகினால் குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக முடியும். காகங்கள் தாக்கும் சம்பவங்களும் அதிகரிக்கும்,” என்றார் திரு சீ.
அவ்வாறு நடப்பதற்கு முன்னரே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அவர், காகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு அவற்றைச் சுடும் நடவடிக்கையை மீண்டும் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
தேசியப் பூங்காக் கழகம், கடந்த ஆண்டு தீவெங்கும் கிட்டத்தட்ட 9,000 காகங்களின் கூடுகளை அப்புறப்படுத்தியது.

