பொங்கோலில் காகம் பிடிக்கும் பொறிகள்; பறவைகளுக்குத் தீனி போட வேண்டாம் என வலியுறுத்தல்

பொங்கோலில் காகம் பிடிக்கும் பொறிகள்; பறவைகளுக்குத் தீனி போட வேண்டாம் என வலியுறுத்தல்

2 mins read
83a8436b-cdce-4c92-9df0-c8c5017d30c1
பிடிபடும் பறவைகளுக்கு கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கும் என்றும் அவை எந்தவொரு தீங்கோ அல்லது துன்பமோ இன்றிப் பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளன என்றும் பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங் உறுதி அளித்தார். - படம்: ஃபேஸ்புக்/இயோ வான் லிங்

பறவைகள் குறித்து அதிகாரிகளுக்குப் புகார் கிடைத்ததை அடுத்து, அண்மையில் பொங்கோல் வட்டாரத்தில் காகம் பிடிக்கும் பொறிகள் அமைக்கப்பட்டதாகப் பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங் தெரிவித்தார்.

அப்பகுதியில் வைக்கப்பட்ட கூண்டு வகைப் பொறிகள் லார்சன் பொறிகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை மனிதாபிமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று திருவாட்டி இயோ திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 27) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

பிடிபடும் பறவைகளுக்கு கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கும் என்றும் அவை எந்தவொரு தீங்கோ அல்லது துன்பமோ இன்றிப் பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் உறுதி அளித்தார்.

“பறவைகளைக் கையாள்வது அனைத்தும் நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறோம். மேலும் காகங்கள் கவனமாகக் கையாளப்படுவதை உறுதி செய்யும் அதேவேளையில், நிலைமையை எப்போதும் பொறுப்புடன் நிர்வகிப்பதே எங்கள் அணுகுமுறையாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

நகர மன்றமும், தேசியப் பூங்காக் கழகமும் காகங்களின் நிலைமையைக் கவனமாகக் கண்காணித்து வருவதாகத் திருவாட்டி இயோ தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

கூடுகட்டும் காலங்களில் காகங்கள் அதிகத் தற்காப்பு உணர்வுடன் நடந்துகொள்ளும் என்று அவர் விளக்கினார்.

“நாங்கள் தகுந்த முறையில் செயல்பட்டு அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க, எங்கள் குழுவினர் இந்த இடங்களைக் கவனமாகக் கண்காணித்து வருகின்றனர்,” என்றார் திருவாட்டி இயோ.

குடியிருப்பாளர்களும் இதில் தங்கள் பங்களிப்பை வழங்க முடியும் என்று அவர் கூறினார்

உணவுக் கழிவுகள் மற்றும் குப்பைகளைத் தொட்டிகளில் முறையாக வீசவேண்டும். மேலும் மக்கள் வனவிலங்குகளுக்குத் தீனி போடக்கூடாது என்றார் அவர்.

“தீனி போடுவது அதிகப் பறவைகளை ஈர்ப்பதுடன் அவற்றின் இயல்பான நடத்தையையும் மாற்றுகிறது. இது குடியிருப்பாளர்கள் மற்றும் விலங்குகள் ஆகிய இரு தரப்பினரின் நிலைமையையும் மோசமாக்குகிறது. இதுபோன்ற செயல்களுக்கு எதிராக நாங்கள் கடுமையான அமலாக்க நடவடிக்கையை எடுப்போம்,” என்று திருவாட்டி இயோ கூறினார்.

வனவிலங்குச் சட்டத்தின்படி, பறவைகள் உட்பட வனவிலங்குகளுக்குத் தீனி போடுவது சட்டவிரோதமாகும். முதல்முறை குற்றம் செய்பவர்களுக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். தொடர்ந்து இக்குற்றத்தைச் செய்பவர்களுக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்