தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காகங்களின் உருவ பொம்மைகளைக் கொண்டு நடவடிக்கை

2 mins read
b2b2552d-8419-4d1d-938c-831981698c64
காகங்களை விரட்ட உருவ பொம்மைகளைப் பயன்படுத்துகிறது தேசியப் பூங்காக் கழகம். - படம்: தேசியப் பூங்காக் கழகம்

சிங்கப்பூரில் ஆக்கிரமிக்கும் தன்மையுடையதாகக் கருதப்படும் கோர்வஸ் ஸ்பெலென்டென்ஸ் (Corvus Splendens) ரக காகங்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்றுகூடுவதைத் தடுக்க உருவ பொம்மைகளைத் தேசியப் பூங்காக் கழகம் பயன்படுத்துகிறது.

இறந்த காகத்தைப் பிரதிபலிக்கும் உருவ பொம்மைகளைக் கழகம் மரத்தில் தொங்கவிட்டுள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்தகைய உருவ பொம்மைகளின் சோதனைகள் ஓரளவு வெற்றிகரமாக இருந்ததால் தேசியப் பூங்காக் கழகம் சிங்கப்பூரில் முதன்முறையாக அந்த முறையைச் சோதிக்கிறது.

காகங்கள் ஒன்றுகூடும் இடங்களில் வைக்கப்படும் உருவ பொம்மைகள் ஆபத்தைக் குறிப்பதால் காகங்கள் வேறு இடங்களுக்குக் கலைந்து செல்லும் என்று எதிர்பார்ப்பதாகத் தேசியப் பூங்காக் கழகத்தின் வனவிலங்கு நிர்வாக இயக்குநர் ஹாவ் சூன் பெங் குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டின் இறுதியில் சிங்கப்பூரில் உண்மையான காகத்தைப் போன்ற உருவ பொம்மைகள் வைக்கப்பட்டன. ஒவ்வோர் உருவ பொம்மையும் ஒவ்வோர் இடத்திலும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் வைக்கப்பட்டதாகக் கழகம் சொன்னது.

காகங்கள் அதிகம் கூடும் கிட்டத்தட்ட எட்டு இடங்களில் 2023ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 15 உருவ பொம்மைகள் வைக்கப்பட்டன.

2023ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் காகங்கள் தொடர்பில் ஏறக்குறைய 7,000 புகார்கள் வந்ததாகக் கழகம் சொன்னது. அந்தப் புகார்கள் பெரும்பாலும் இரைச்சல், தாக்குதல், உணவளித்தல், அசுத்தப்படுத்துதல் ஆகியவை தொடர்பானவை.

எந்தெந்த இடங்களில் உருவ பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன என்று கழகம் தெரிவிக்கவில்லை. எனினும், ஏப்ரலில் காத்தோங் வி மால் கடைத்தொகுதிக்கு வெளியில் உள்ள மரத்தில் ஓர் உருவ பொம்மை காணப்பட்டது.

“இது ஒரு பிளாஸ்டிக் காகம். யாரும் அச்சப்பட வேண்டாம்,” என்ற குறிப்பும் உருவ பொம்மை தொங்கவிடப்பட்டிருந்த மரத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின் ஏப்ரல் 24ஆம் தேதி உருவ பொம்மை அகற்றப்பட்டது.

பாதசாரிகளை நோக்கி பறக்கும் காகங்கள் அவர்களைத் தாக்குவது குறித்து செய்தி வந்ததை அடுத்து காகங்களின் உருவ பொம்மைகள் வைக்கப்பட்டன.

பீ‌‌‌ஷான், சிராங்கூன் ஆகிய பகுதிகளில் 2023 பிப்ரவரியிலிருந்து மார்ச் வரை காகங்களின் தாக்குதல் குறித்த புகார்கள் வந்தன.

கத்தோங் வி கடைத்தொகுதிக்கு வெளியில் உள்ள மரத்தில் காகத்தின் உருவ பொம்மை கடந்த ஏப்ரலில் வைக்கப்பட்டது.
கத்தோங் வி கடைத்தொகுதிக்கு வெளியில் உள்ள மரத்தில் காகத்தின் உருவ பொம்மை கடந்த ஏப்ரலில் வைக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்