சிங்கப்பூரில் கச்சா எண்ணெய்ச் சேமிப்பு வசதியை அமைப்பதற்கான கூட்டு நோக்கத்தைச் சிங்கப்பூரும் சவூதி அரேபியாவும் திங்கட்கிழமை (அக்டோபர் 26) அறிவித்தன.
சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார நிகழ்ச்சியில், சவூதி அரேபிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ, சிங்கப்பூரின் எரிசக்திச் சந்தை ஆணையம், ஜூரோங் நகராண்மைக் கழகம் ஆகியவற்றிற்கு இடையே இதன் தொடர்பில் புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது என்று எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு தெரிவித்தது.
இந்த உத்தேச ஏற்பாட்டின்கீழ், சிங்கப்பூரின் ஜூரோங் தீவில் உள்ள ஜூரோங் ராக் கேவர்ன்ஸ் எனும் பாறைக்குகைப் பகுதியில் சவூதி அரேபியக் கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்படும். இது 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முதல் படியாக இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு விளங்குகிறது என்று அமைச்சு கூறியது.
இங்குச் சேமிக்கப்படும் கச்சா எண்ணெய், விநியோகத் தடை ஏற்படும் வேளையில் சிங்கப்பூரின் எரிசக்திப் பாதுகாப்பையும் மீள்திறனையும் வலுப்படுத்தும். அதேவேளையில், தென்கிழக்காசியாவில் சவூதி கச்சா எண்ணெய் விநியோகக் கட்டமைப்பின் மீள்திறனையும் இந்த ஏற்பாடு மேம்படுத்தும்.
இது சிங்கப்பூருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பில் ஒரு புதிய மைல்கல் ஆகும். அத்துடன், வட்டார எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இரு நாடுகளின் கூட்டுக் கடப்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது. முக்கிய வட்டார எரிசக்தி நடுவமாகத் திகழும் சிங்கப்பூரின் பங்கையும் இது அங்கீகரிக்கிறது என அமைச்சு தெரிவித்தது. இரு நாடுகளின் எரிசக்தி அமைச்சுகளும் தொடர்ந்து கூட்டாகப் பணியாற்றும்.
சவூதி உடன்பாடு தவிர, திரவநிலை இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஒத்துழைப்பை ஆராய, சிங்கப்பூரின் ‘கேஸ்கோ’ நிறுவனமும் ‘பிடி தாய்லாந்து’ நிறுவனமும் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
விநியோகக் கட்டமைப்பின் மீள்திறனை வலுப்படுத்தத் தொடர்ந்து ஒத்துழைப்பை நாடுவதாக வர்த்தக, தொழில்துறை அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் சிங்கப்பூர் எரிசக்தி விரிவுரையில் கூறினார். இத்தகைய நடவடிக்கைகளே தற்போதைய எரிசக்தி நெருக்கடியின் மோசமான பாதிப்புகளைத் தணிக்கச் சிங்கப்பூருக்கு உதவியுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
