‘வில்லா வியெ ஒடிசி’ சொகுசுக் கப்பல் சிங்கப்பூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
அக்கப்பலின் உரிமையாளர்கள் நிதிச் சிக்கல்களை எதிர்நோக்குவதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏஷியாஒன் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வில்லா வியெ ஒடிசி’ கப்பலைக் ‘கைது செய்யும்’ சட்ட நிறுவனம் ஹெல்ம்ஸ்மன் எல்எல்சி என்று சிபிஎஸ் நியூஸ் ஊடகம் பார்த்த நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ் இச்செய்தியை வெளியிட்டது.
ஒரு கப்பல் கைது செய்யப்படுவது என்பது கடல்துறை சார்ந்த உரிமை கோரிக்கையை நிறைவேற்ற நீதிமன்றம் அக்கப்பலைத் தடுத்துவைக்கும் நடவடிக்கையாகும்.
‘ஒடிசி’ கப்பலுக்கு உரிமை வகிக்கும் நிறுவனமான, அமெரிக்காவில் இயங்கும் வில்லா வியெ ரெசிடன்சஸ் ஒரு நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 500,000 டாலர் (640,000 வெள்ளி) தொகையை மிச்சம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அந்நிறுவனம்தான் கப்பலைத் தடுத்துவைக்க சட்ட நிறுவனத்தை நியமித்ததா என்பது தெரியவில்லை.
தடுத்துவைக்கப்பட்டுள்ள அக்கப்பல் சாங்கி பே பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருப்பதாக ஏஷியாஒன் அறிகிறது.
ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரிப்பால் கம்போடியாவில் தங்களின் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக வில்லா வியெ ரெசிடன்சஸ் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28ஆம் தேதி கப்பலில் இருந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் அதிலிருந்து இறங்க ஏழு மணிநேரம் மட்டுமே வழங்கப்பட்டது.
