12% ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் கிரிப்டோ.காம்

12% ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் கிரிப்டோ.காம்

2 mins read
3342872b-1781-4710-84f7-48748b7ae55f
கிரிப்டோ.காம் சின்னம். - படம்: ஐகியூ.விக்கி

சிங்கப்பூரிலிருந்து இயங்கும் மின்னிலக்க நாணய நிறுவனமான கிரிப்டோ.காம் (Crypto.com) உலகளவில் உள்ள அதன் ஊழியர்களில் 12 விழுக்காட்டினரை ஆட்குறைப்பு செய்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

தங்களின் உத்திபூர்வ மறுவடிவமைப்பு நடவடிக்கையின் அங்கமாக 180 கிரிப்டோ.காம் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த ஆட்குறைப்பு, நிறுவனம் மேற்கொள்ளும் மறுசீரமைப்பு நடவடிக்கையில் அடங்கும் என்று கிரிப்டோ.காமின் மனிதவளப் பிரிவு, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டது. வியாழக்கிழமை (மார்ச் 19) அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில் வேறு எந்தத் தகவலும் இடம்பெறவில்லை.

முக்கிய வர்த்தகத் திட்டங்களுக்கு நிறுவனம் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதாக மட்டும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

100 மில்லியனுக்கும் அதிகமான பயனீட்டாளர்கள் தங்களிடம் பதிவுசெய்துகொண்டதாக கிரிப்டோ.காம் 2024ஆம் ஆண்டு தெரிவித்தது. ஆட்குறைப்புக்கு முன்பு நிறுவனத்தில் 1,500க்கும் அதிகமான ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர் என்று அதன் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் அதன் ஊழியர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இன்னும் தெரியவில்லை. தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத சிங்கப்பூரில் இருக்கும் கிரிப்டோ.காம் ஊழியர் ஒருவர், வியாழக்கிழமை காலை அந்நிறுவனத்தின் தொடர்புத் தளமான ஸ்லாக்கிலிருந்து (Slack) தான் அகற்றப்பட்ட பிறகுதான் ஆட்குறைப்பு குறித்துத் தெரிய வந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

உலகளவில் கிரிப்டோ.காம் ஊழியர்களில் 10 விழுக்காட்டினர் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக அந்நிறுவனத்தின் மனிதவளப் பிரிவைப் பிரதிநிதிக்கும் ஒருவர் வியாழக்கிழமை பிற்பகல் சொன்னார். ஆனால், ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் மாறுபட்டு இருக்கின்றன.

கிரிப்டோ.காமின் வளர்ச்சி, பயனீட்டாளர் தொடர்பு நிர்வாகப் (growth and customer relationship management) பிரிவு உள்ளிட்டவை ஆக அதிகம் பாதிக்கப்பட்டவற்றில் அடங்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. சிங்கப்பூரில் அப்பிரிவில் உள்ள 20 பேரில் பாதிக்கும் அதிகமானோர் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தகங்களுக்கான செயற்கை நுண்ணறிவு அம்சங்களைச் செயல்பாடுகளில் சேர்த்துக்கொண்டுவரும் நிறுவனங்களில் ஒன்றாக கிரிப்டோ.காமும் இருப்பதாக அந்நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது தெரிவித்தது.

கிரிப்டோ.காம், 2016ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நிறுவப்பட்டது. சிங்கப்பூர், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதற்குக் கிளைகள் உள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கிரிப்டோ.காம் பலமுறை ஆட்குறைப்பு செய்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்