வலுவான சமூகத்தை உருவாக்க பண்பாட்டுப் பரிவுணர்வு அவசியம் என்றும் அது நம் சமூகத்தின் இதயத்துடிப்பாக திகழும் நம்பிக்கை என்றும் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (ஜனவரி 29) தொடங்கிய செயின்ட் லியுக்ஸ் மருத்துவமனையின் 3வது ‘பரிவுணர்வு பராமரிப்பு’ கருத்தரங்கில் உரையாற்றிய திரு தினேஷ் வாசு தாஸ், சுகாதாரத்துறையில் பண்பாட்டுப் பரிவுணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
முப்பதாவது ஆண்டுநிறைவைக் கொண்டாடும் செயின்ட் லியுக்ஸ் மருத்துவமனையின் சுகாதாரச் சேவையை அவர் பாராட்டினார்.
“சிங்கப்பூரின் பன்முக கலாசாரச் சமூகத்தில், பராமரிப்பு என்பது மருத்துவச் சூழல்களுக்கு அப்பால், அன்றாட உரையாடல்களிலும் விரிவடைவதாகவும் உள்ளது. அவ்வகையில், பண்பாட்டுப் பரிவுணர்வு என்பது மக்களின் வெவ்வேறு பின்னணியை அங்கீகரிப்பதோடு, பணிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் மரியாதையுடன் அவர்களை அணுகும் நடைமுறை சார்ந்தது,’’ என்று திரு தினேஷ் விளக்கினார்.
இத்தகைய விழுமியங்களுடன் ஒருவருக்கொருவர் பழகும் விதம் ஆற்றல்மிகு குழுப்பணிக்கும், நோயாளிகளுடன் அர்த்தமுள்ள வகையில் கலந்துரையாடவும், அதன்வழி வலுவான உறவுகளை பேணுவதற்கும் தேவையான முக்கியமான அடித்தளத்திற்கு வித்திடும் என்று அவர் சொன்னார்.
கலாசார வேறுபாடு, உலகளாவிய தொடர்பு ஆகியவற்றால் வடிவமைக்கப்படும் சமுதாயத்தில், பல்வேறு வாழ்க்கைச் சூழல், நம்பிக்கைகள், முன்னுரிமைகளைக் கொண்டிருக்கும் நோயாளிகள், சக ஊழியர்களுடன் சுகாதாரத் துறையினர் பணியாற்ற வேண்டியது குறித்தும் மனிதவளத் துணை அமைச்சருமான தினேஷ் தமது உரையின்போது சுட்டினார்.
‘‘இவ்வாண்டு மாநாட்டின் கருப்பொருள், ‘பண்பாட்டுப் பரிவுணர்வை வளர்ப்போம்’ என்பதாகும். பன்முகத்தன்மைமிக்க சமூகத்தில் வெவ்வேறு பின்னணியில் இருந்துவரும் மக்களுடன் பழகும்போது கனிவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், பணிவுடனும் நடந்துகொள்வதையும், வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு ஒருவரையொருவர் மதித்து நடப்பதையும், அவ்வாறு நடந்துகொண்டால் நம் சமூகம் அதிக வலிமையுடனும் ஒற்றுமையுடனும் திகழும் எனும் அர்ப்பணிப்பையும் அது பறைசாற்றுகிறது,’’ என்று கூறினார் அவர்.
கருத்தரங்கின் முக்கிய நிகழ்வாக செயின்ட் லியுக்ஸ் மருத்துவமனை, எலிசபெத் குஃப்ளர்-ராஸ் அறக்கட்டளை ஆகியவற்றுக்கிடையே சுகாதாரப் பராமரிப்பில் பண்பாட்டுப் பரிவுணர்வை அடிப்படையாகக் கொண்டு, அக்கொள்கையை அனைத்துலக அளவில் எடுத்துச்செல்லும் நோக்கத்துடன் ஒரு புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது.
நோயாளிகளின் மருத்துவ நிலையைக் கடந்து, அவர்களது நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் அதேவேளையில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குச் செவிசாய்த்து, அவர்களை மனிதர்களாகப் பார்த்து பரிவுடன் அணுகவும் அது இலக்கு கொண்டுள்ளது.
கருத்தரங்கில் சுகாதாரப் பராமரிப்பு,தொழில்துறை சார்ந்த தலைவர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

