உள்ளூர் பாணியில் முதல் முறை யாக முக்கியமான சைகைகள் மூன்று புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவை பராமரிப்பாளர்கள், குறைபாடு உள்ளவர்களுடன் தங்களை இணைத்துக்கொள்ள உதவும். பொங்கோல் வட்டார நூலகத்தில் நேற்று வெளியிடப்பட்ட அந்தப் புத்தகங்களை இரவல் பெறலாம்; வாங்கியும் செல்லலாம்.
கை அசைவுகளால் பேசும் இந்த சைகை மொழி, மைண்ட்ஸ் எனப்படும் சிங்கப்பூர் அறிவுத்திறன் குறைபாடுடையோருக்கான அமைப்பு நடத்தும் பள்ளிகளில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன.
பின்னர் 2020ல், மைண்ட்ஸ் அமைப்பு, தான் உருவாக்கிய சிங்கப்பூர் சைகை எனும் தொடர்புமுறையை தனது நிலையங்களில் உள்ள பயனாளர்களுக்குக் கற்றுக்கொடுக்கத் தொடங்கியது.
இந்த சைகை மொழிகள் வகுப்பறைகளிலும் கூட்டநெரிசல் உள்ள இடங்களிலும், சிறப்புத் தேவையுடையவர்கள் பேசுவதற்குச் சிரமமோ, கூச்சமோ அடையும்போது உதவும் என்று எல்லா வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 4,500 பயனாளர்களுக்கு ஆதரவளிக்கும் மைண்ட்ஸ் அமைப்பின் பேச்சு, மொழி சிகிச்சைப் பிரிவின் தலைவர் இவா லோ விவரித்தார்.
ஒவ்வொரு புத்தகமும் $26 முதல் $56 வரையில் விற்கப்படுகின்றன. அவற்றில் 700 சைகைகளை விளக்கும் கேலிச்சித்திர வடிவங்கள் இருக்கும். அவற்றில் உணவு, இடங்கள் போன்ற எளிய சைகைகளும் நேரத்தைக் குறிக்கும் நவீன சைகைகளும் அடங்கும்.
நிபுணர்கள், பராமரிப்பாளர்கள், குடும்பங்களை மையமாகக் கொண்ட சைகை மொழிப் பயிலரங்குகளும் உண்டு.
இந்த சைகை மொழிகள் ஆஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ளதிலிருந்து உள்ளூர் வடிவத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதில் கறிபஃப், போப்பியா போன்ற உணவுகளுடன் தைப்பூசம் போன்ற விழாக்களையும் விளக்கும் சைகைகளும் உண்டு.
"இந்தப் புத்தகம் ஆட்டிசம் குறைபாடு உள்ள என் 13 வயது மகள் தன்யாவுடன் பேசும் ஆற்றலைப் பெற உதவும். சில நேரங்களில் அவர் வருத்தமாக இருக்கும்போது அவருடன் தொடர்புகொள்வது சிரமமாக இருக்கும். ஆனால் இப்போது புத்தகத்தில் உள்ள சைகைகளைப் பயன்படுத்தி, அவர் செய்ய வேண்டியவற்றை, குறிப்பாக மெதுவாக மூச்சு விடுதல், அமைதியாக இருத்தல் போன்றவற்றை எடுத்துரைக்கலாம்," என்றார் திருவாட்டி அனுப்பிரியா பக்தவத்சலம், 39.


