சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் உள்ள ‘மனிஸ்மார்ட்’ நிறுவனத்தின் இணையத்தளம் ஊடுருவப்பட்டதை அடுத்து வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளன.
அதையடுத்து பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்களுக்கு அதுபற்றி நிறுவனம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.
கடந்த மாதம் 29ஆம் தேதி, அனுமதியில்லாத மூன்றாம் தரப்பு, தனது தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் சிலவற்றில் அத்துமீறி நுழைந்ததாக ‘மனிஸ்மார்ட்’ குறிப்பிட்டது.
‘மனிஸ்மார்ட்’ தளம் வழியாக நிதிச் சேவைகளை ஒப்பிடும் அல்லது அத்தகைய சேவைகளுக்கு விண்ணப்பம் செய்யும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஊடுருவப்பட்ட கட்டமைப்புகளில் இருந்தன.
வாடிக்கையாளர்களின் பெயர்கள், பிறந்தநாள், அடையாள அட்டை எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், வருமான விவரங்கள், வாகன விவரங்கள், வாகனக் காப்பீட்டு விவரம் ஆகியவை கசிந்ததாக நிறுவனம் குறிப்பிட்டது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யவேண்டும் என்பதைப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு ‘மனிஸ்மார்ட்’ நிறுவனம் ஆலோசனை வழங்கிவருகிறது.
“ஊடுருவல் பற்றி அறிந்தவுடன் கட்டமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்,” என்று ‘மனிஸ்மார்ட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் நாயர் கூறினார்.
சிங்கப்பூரின் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம், சிங்கப்பூர் நாணய ஆணையம், ஹாங்காங்கின் தனிநபர் தகவலுக்கான அந்தரங்க ஆணைய அலுவலகம், காப்பீட்டு ஆணையம் ஆகியவற்றிடம் தகவல் அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடுருவலை விசாரிக்க தனியார் இணையப் பாதுகாப்பு அமைப்பையும் மின்னிலக்கத் தடயவியல் வல்லுநர்களையும் ‘மனிஸ்மார்ட்’ பணியமர்த்தியுள்ளது.
இதற்கிடையே, தனது செயல்பாடுகள் வழக்கம்போல தொடரும் என்று அது தெரிவித்தது.
ஊடுருவலுக்கு எது இட்டுச்சென்றது என்பதை ஆராய்வதாகக் கூறிய திரு நாயர், மீண்டும் அத்தகைய சம்பவம் ஏற்படுவதைத் தவிர்க்க கட்டமைப்பில் மாற்றங்கள் செய்வதாகச் சொன்னார்.
