செப்டம்பர் மாதம் தீபாவளி ஒளியூட்டு தொடங்கியது முதலே லிட்டில் இந்தியா வட்டாரத்தில் தீபாவளி வணிகப் பரபரப்பு தென்படத் தொடங்கியது.
இந்நிலையில், தீபாவளித் திருநாளுக்கு முதல்நாளான புதன்கிழமை (அக்டோபர் 30) மக்கள் வெள்ளத்தால் லிட்டில் இந்தியா வட்டாரம் நிரம்பி வழிய, பண்டிகைக்காலப் பரபரப்பின் உச்சத்தைக் காண முடிந்தது.
கொளுத்தும் வெயிலிலும் பொருள் வாங்குவதற்காக லிட்டில் இந்தியாவிற்கு வந்திருந்தோர் சிலரிடம் தமிழ் முரசு பேசியது.
“வாழையிலை, இறைச்சி, காய்கறிகள், பழங்கள் போன்ற சமையல் பொருள்களை வாங்க கடைசி நேரத்தில்தான் வர வேண்டியுள்ளது. அப்போதுதான் அவை புதிதாகக் கிடைக்கும்,” என்றார் தமது குடும்பத்தினரோடு லிட்டில் இந்தியாவுக்கு வந்திருந்த, குடும்ப மேம்பாட்டு அமைச்சில் பணிபுரியும் குடும்பப் பயிற்சியாளரும் மேலாளருமான பிரமில்லா.
“கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு கூட்டம் அதிகந்தான்,” என்றார் தொடக்கப்பள்ளி தமிழாசிரியர் ஆர். விஜயலட்சுமி.
உயர்ந்துவரும் விலைவாசியைப் பற்றி பேசுகையில், நிறைய பொருள்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துவிட்டதால் பலரும் மலேசியாவுக்குச் சென்று தீபாவளிப் பொருள்கள் வாங்குவதாக அவர் சொன்னார். ஆயினும், மலேசியா சென்று பொருள்கள் வாங்கி, சிங்கப்பூருக்குக் கொண்டுவருவதற்குள் கெட்டுப்போக அதிக வாய்ப்புள்ளதால் பணம் சற்று அதிகமாக செலுத்தவேண்டியிருந்தாலும் பரவாயில்லை என்று அனைத்தையும் தான் லிட்டில் இந்தியாவிலேயே வாங்கிவிடுவதாக அவர் குறிப்பிட்டார்.
தீபாவளி பிறக்கும் நள்ளிரவுவரை சிலர் லிட்டில் இந்தியாவில் கடைகள் மூடுவதற்குமுன் தாங்கள் ஆசைப்படும் பொருள்களை மலிவான விலையில் பெறக் காத்திருந்தனர்.
“தீபாவளிக்கு முக்கியமாக தேவைப்படும் இறைச்சி, பூக்கள் போன்ற தேவையான பொருள்களை வாங்குவதற்காக நான் அதிகாலையிலேயே லிட்டில் இந்தியாவுக்கு வந்துவிடுவேன். பகலில் வந்தால் கூட்டமாக இருக்கும். வேலை முடிந்தவுடன் என் மகன், அலங்காரப் பொருள்கள் போன்ற அவ்வளவு அவசியமில்லாத பொருள்கள் தள்ளுபடி விலையில் கிடைக்குமா என்று பார்த்து வருவான். இதை ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக்கு முதல் நாளன்று நாங்கள் செய்வது வழக்கமாகிவிட்டது,” என்றார் திருவாட்டி வரலட்சுமி கோபாலன், 55.
தொடர்புடைய செய்திகள்
“தீபாவளிக்காக என் மனைவி வீட்டில் இனிப்புகளையும் நொறுக்குத்தீனிகளையும் தயார்செய்து வருகிறார். அவற்றுக்குத் தேவையான சில சமையல் பொருள்கள் முடிந்துவிட்டதால் அவற்றை வாங்குவதற்காக இங்கு வந்துள்ளேன்,” என்றார் திரு கதிரேசன் சத்தியலிங்கம், 32.
பெரியவர்களைக் காட்டிலும் இளம் தலைமுறையினரே தீபாவளியைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். அதற்கேதுவாக, தீபாவளி கொண்டாடும் மாணவர்களுக்கு அரைநாள் விடுமுறையாக புதன்கிழமையன்று காலை 10.30 மணிக்கே பள்ளி முடிந்துவிட்டது.
அதனால், கையில் மருதாணியிடுவதற்காகத் தன் நண்பர்களுடன் தீபாவளிச் சந்தைக்கு வந்திருந்ததாகச் சொன்னார் 12 வயது ரம்யா குமரேசன்.
இளையர், பெரியோர் எனப் பலதரப்பினரும் ஆர்வத்தோடு பொருள்கள் வாங்கிச் செல்ல லிட்டில் இந்தியாவில் திரண்டதால், தீபாவளித் திருநாள் உணர்வு லிட்டில் இந்தியாவில் பொங்கிப் பெருகியது.