சிங்கப்பூரில் உள்ள நான்கு முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது 2025ஆம் ஆண்டில் இணையத் தாக்குதல் நடத்தப்பட்டது.
வேறொரு நாட்டின் ஆதரவில் இணையத் தாக்குதல்களை நடத்தும் யுஎன்சி3886 குழு இந்தத் தாக்குதலை மேற்கொண்டது.
சிங்கப்பூரின் முக்கியச் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்க அக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான செய்தி முதன்முறையாக 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
அந்த இணையத் தாக்குதல் மூலம் முக்கியத் தரவுகள் திருடப்படவில்லை என்றும் 5ஜி சேவைகள் போன்ற முக்கியக் கட்டமைப்புகள் பாதிப்படையவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1, சிம்பா ஆகியவை குறிவைக்கப்பட்டதாக திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 9), தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ முதல் முறையாகத் தெரிவித்தார்.
“யுஎன்சி3886 நடத்திய இணையத் தாக்குதல்கள், சிங்கப்பூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக வேண்டுமென்றே, குறிவைத்து, திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று விசாரணை மூலம் தெரியவந்துள்ளது,” என்று அமைச்சர் டியோ கூறினார்.
யுஎன்சி3886 நடத்திய தாக்குதல்களுக்கு எதிராகத் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டோரின் முயற்சிகளைக் கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியில் அமைச்சர் டியோ பேசினார்.
இந்த நிகழ்ச்சி பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் உள்ள சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
இணையத் தாக்குதல்களை நடத்தியோரால் சிறிதளவு தொழில்நுட்பத் தரவுகளை மட்டுமே திருட முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சில முக்கியக் கட்டமைப்புகளுக்குள் அவர்களால் நுழைய முடிந்தபோதிலும் அவற்றின் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அளவுக்கு அவர்களால் செயல்பட முடியாமல் போனது என்று அமைச்சர் டியோ தெரிவித்தார்.
முக்கியத் தரவுகள் திருடப்படாவிட்டாலும் இந்த இணையத் தாக்குதல்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார் அவர்.
“தொலைத்தொடர்பு, இணையச் சேவைக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய மேலும் தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும். அவ்வாறு நேர்ந்தால் கைப்பேசி, இணைய இணைப்பு தேவைப்படும் அனைத்துச் சாதனங்களும் பாதிக்கப்படும்.
“இணையத் தாக்குதல் காரணமாகக் கூடுதல் விளைவாக வங்கி மற்றும் நிதி, போக்குவரத்து மற்றும் மருத்துவச் சேவைகள் போன்ற அத்தியாவசியச் சேவைகளும் பாதிப்படையக்கூடும்,” என்று சிங்கப்பூரில் இணையப் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருமதி டியோ கூறினார்.
சீனாவுடன் தொடர்புடைய உளவுக் குழுவாக யுஎன்சி3886 குழு முதன்முதலில் 2022ஆம் ஆண்டில் இணையப் பாதுகாப்புக் குழுவான ‘மான்டியன்ட்’டால் கண்டுபிடிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நிகழும் இணைத் தாக்குதலுக்கும் சீனாவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று சிங்கப்பூரில் உள்ள சீனத் தூதகரம் தெரிவித்தது.
இணையத் தாக்குதல்களைச் சட்ட ரீதியாகச் சீனா முடக்கி வருவதாகவும் அது கூறியது.

