எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் ஐந்து கணினிக் கட்டமைப்புகள் மீது அண்மையில் நான்கு இணையத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
அந்தத் தாக்குதல்களில் நிதி அல்லது வங்கித் தகவல்கள், வங்கி அட்டை விவரங்கள், வாடிக்கையாளர் கணக்கு அனுமதி முதலியவை பாதிக்கப்படவில்லை என்று நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட கட்டமைப்புகள் இரண்டு குழுக்களைச் சேர்ந்தவை.
முதல் குழுவின்கீழ் வந்த கட்டமைப்புகளின்மீதான தாக்குதலில் மின்னஞ்சல் முகவரிகள், சிலரின் பெயர்கள், அஞ்சல் முகவரிகள், கைப்பேசி எண்கள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் குழுவின்கீழ் வந்த கட்டமைப்பில் எந்த தனிநபர் தரவுகளும் அடங்கவில்லை என்று எஸ்பிஎச் மீடியா தெரிவித்தது.
கட்டமைப்புகளின்மீதான தாக்குதல்களின் விளைவாகப் பாதிப்புக்குள்ளான தகவல்களின் விகிதம் எஸ்பிஎச் மீடியா தரவுத்தளத்தில் ஒன்பது விழுக்காடு.
முதற்கட்ட விசாரணையின்படி அனைத்துத் தாக்குதல்களையும் நடத்தியது ஒரே தரப்பு என்றும் அவை செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.
முதல் தாக்குதல் நவம்பர் 4ஆம் தேதி வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் தகவல்களைக் கொண்ட கட்டமைப்பின்மீது நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து பாதுகாப்பு முயற்சிகள் அதிகரிக்கப்பட்டதோடு தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம், சிங்கப்பூர் இணையப்பாதுகாப்பு அமைப்பு, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றிடம் தாக்குதல்பற்றித் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இருப்பினும், நவம்பர் 5, 7, 8ஆம் தேதிகளில் வானொலி மேம்பாடு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விளம்பரங்கள், ஸ்ட்ரெய்ட்ஸ் வரைகலைக் கட்டமைப்புகள்மீது தாக்குதல்கள் நடந்தன.
தாக்குதல்கள் அன்றாடச் சோதனைகளின்வழி கண்டறியப்பட்டதாக எஸ்பிஎச் மீடியா குறிப்பிட்டது.
மென்பொருள் குறைபாடுகளாலும் கட்டமைப்புகளின் அமைப்புகளாலும் நடந்ததாக நம்பப்படும் தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க பலவீனங்களைச் சரிசெய்து கூடுதல் பாதுகாப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் எஸ்பிஎச் மீடியாவை 6388 3838 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
