தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபோன் பயனர்களைக் குறிவைக்கும் இணையக் குற்றவாளிகள்: எச்சரிக்கை

1 mins read
cbb119ea-4079-4764-929c-c3d1afeb2d34
குறுஞ்செய்திகள் உண்மையானதுதானா என்பதை அதிகாரபூர்வ வழிகளில் அல்லது 1799 என்ற மோசடித் தடுப்பு தொலைபேசி எண் மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துவோர் முன்பின் தெரியாதோரிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளுக்குப் பதில் அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐபோனின் ஐமெசேஜ் செயலி வழியாக இணையக் குற்றவாளிகள் மோசடிக் குறுஞ்செய்திகளை அனுப்பி வருவதாகப் புதன்கிழமையன்று (ஜனவரி 15) சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு (சிஎஸ்ஏ) தெரிவித்தது.

அதன் வழியாக ஐமெசேஜ் செயலியின் பாதுகாப்பு அம்சங்களை முடக்க அவர்கள் முயலலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உண்மையானது போன்றே தோன்றும் அக்குறுஞ்செய்திகள், ‘Y’ எனத் தட்டச்சு செய்து பதிலளிக்கும்படி அறிவுறுத்தலாம்.

அப்படிச் செய்வதன் மூலம், அக்குறுஞ்செய்திக்கான ஐமெசேஜின் உள்ளமைவு (built-in) இணைய ஊடுருவல் பாதுகாப்பு அம்சம் முடக்கப்படும். அதனையடுத்து, அறிமுகம் இல்லாதோர் அனுப்பும் இணைப்புகளைக் காண முடியும்.

அவற்றைச் சொடுக்கும்போது, இணையப் பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாக நேரிடலாம். தகவல் திருட்டு, தீங்குநிரலை நிறுவுதல், மோசடி போன்றவை அவற்றுள் அடங்கும் என்று ஆணையம் எச்சரித்துள்ளது.

அத்தகைய குறுஞ்செய்திகளைப் புறக்கணிப்பது, அறிமுகமில்லாதோர் அனுப்பும் குறுஞ்செய்திகளை வடிகட்டுதல் (Filter unknown senders) உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.

அக்குறுஞ்செய்திகள் உண்மையானதுதானா என்பதை அதிகாரபூர்வ வழிகளில் அல்லது 1799 என்ற மோசடித் தடுப்பு தொலைபேசி எண் மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம்.

சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகள் குறித்து ஸ்கேம்ஷீல்டு செயலி வழியாகப் புகார் அளிக்கலாம்.

ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து வந்துள்ளதுபோன்ற குறுஞ்செய்திகள் தொடர்பில் சந்தேகம் இருப்பின், அதனைப் படம்பிடித்து, reportphising@apple.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் புகார் அளிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்