மோட்டார்வாகன நிறுவனமான சைக்கிள் அண்ட் கேரேஜ் சிங்கப்பூரின் (சி&சி) சுமார் 147,000 பயனீட்டாளர்களுடைய விவரங்கள் ஊடுருவப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் விவகாரத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் தரவு மோசடி குறித்துத் தனக்குத் தெரியும் என்றும் புலனாய்வு தொடர்கிறது என்றும் தெரிவித்தது.
சி&சி, பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்களுக்கு வியாழக்கிழமை (ஜூலை 31) அனுப்பிய குறிப்பில் ஊடுருவல் பற்றிய புலனாய்வு நடைபெறுவதாகக் கூறியது. எத்தனை பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை.
“பயனீட்டாளர் தொடர்பு நிர்வாகக் கட்டமைப்பு ஊடுருவப்பட்டதாகவும் பயனீட்டாளர்கள் சிலரின் விவரங்களை ஊடுருவல்காரர் பதிவிறக்கம் செய்ததாகவும் எங்களுக்கு ஜூலை 14ஆம் தேதி தெரியவந்தது,” என்றும் குறிப்பில் அது கூறியிருந்தது.
பயனீட்டாளர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி முதலியவை கசிந்த தகவல்களில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், வங்கி அல்லது கடன்பற்று அட்டை பற்றிய தகவல்கள் கசிந்திருக்கமாட்டா என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.
தரவு அத்துமீறல் குறித்து அறிந்ததும் சி&சி காவல்துறையிடம் புகார் அளித்தது.
கட்டமைப்பு மேலும் ஊடுருவப்படுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் குறிப்பு தெரிவித்தது. தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்திடம் தெரியப்படுத்தியதாகவும் ஊடுருவலின் உத்தேச காரணத்தைக் கண்டறியத் தடயவியல் நிபுணர்களை நாடியதாகவும் அது சொன்னது.
இணைய மோசடி நடப்பதாகச் சந்தேகம் எழுந்தாலோ தனிப்பட்ட தகவல்களைக் கேட்டுக் கோரிக்கைகள் வந்தாலோ விழிப்புடன் இருக்குமாறு பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்களுக்கு சி&சி ஆலோசனை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
மேல் விவரங்கள் வேண்டுவோர் அல்லது சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்துப் புகாரளிக்க விரும்புவோர் சி&சி நிறுவனத்தின் அதிகாரிகளை 6471-9111 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். மின்னஞ்சலும் அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி: customerassistancecentre@cyclecarriage.com.sg