பூகிஸ் வட்டாரத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து 41 வயது சைக்கிள் ஓட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
காலாங் ரோட்டை நோக்கிச் செல்லும் விக்டோரியா ஸ்திரீட்டில் இந்த விபத்து நடந்ததாகக் காவல்துறையினருக்கு வியாழக்கிழமை (ஜூன் 20) காலை 6.30 மணி தகவல் கிடைத்தது.
சாலைச் சந்திப்பு ஓரம் ஒன்றில் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஒருவர், சிவப்பு விளக்கைக் கண்டு நிறுத்தாமல் சென்றது போல எஸ்ஜி ரோடு விஜிலாண்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றில் தென்பட்டது. சாலைச் சந்திப்பின் நடுவே சைக்கிளோட்டி கடந்து செல்கையில் கார் ஒன்று அங்கு திடீரென வந்து அவரை மோதியது. கார் மோதலில், சைக்கிளோட்டி கீழே தள்ளப்பட்டார்.
சைக்கிளோட்டி சுயநினைவின்றி டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
காவல்துறையினர் விசாரணையில் 44 வயது கார் ஓட்டுநர் உதவியளித்து வருகிறார்.

