சாங்கியில் தானா மேரா கோஸ்ட் சாலையில் வியாழக்கிழமை (நவம்பர் 12) காலை ‘டிப்பர் டிரக்’ எனப்படும் கனரக லாரி வாகனத்துடன் நடந்த விபத்தில் சைக்கிளோட்டி ஒருவர் மரணமடைந்தார்.
இதேபோன்று 24 மணிநேரத்துக்கு முன்பாக காத்தோங்கில் நடந்த விபத்திலும் ஒரு சைக்கிளோட்டி மரணமடைந்தார்.
அன்றையதினம் ஏவியேஷன் பார்க் சாலை நோக்கிச் செல்லும் தானா மேரா கோஸ்ட் சாலையில் நடந்த விபத்து குறித்து காலை 8 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
சைக்கிளோட்டி விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) உறுதிப்படுத்தியது.
ஒரு 38 வயது லாரி வாகன ஓட்டுநர் விசாரணையில் உதவி வருவதை காவல்துறை குறிப்பிட்டது.
24 மணிநேரத்துக்குள் டிப்பர் வகை லாரியுடன் நடந்த விபத்தில் சைக்கிளோட்டி உயிரிழந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
புதன்கிழமை மதியம் 3.15 மணியளவில் காத்தோங் பகுதியில் எம்பர் ரோடு, எம்பர் கார்டன்ஸ் சாலைச் சந்திப்பில் லாரிக்கும் சைக்கிளுக்கும் இடையே நிகழ்ந்த விபத்தில் சைக்கிள் ஓட்டிய 37 வயது மாது உயிரிழந்தார்.
அவரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது எஸ்சிடிஎஃப் மருத்துவ பணியாளர்களால் உறுதிசெய்யப்பட்டது. அதில் 47 வயது லாரி ஓட்டுநர் கவனமின்றி வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் கைக்கிளோட்டிகள் சார்ந்த விபத்துகள் அதிகரித்துள்ளன என்று போக்குவரத்துக் காவல் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2023ல் 581ஆக இருந்து, 2024ல் 620 என்ற எண்ணிகையில் அவர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் உயர்ந்தன. அதுவே 2025ல் 772 என 25 விழுக்காடு அதிகரித்தது.
அதேபோன்று விபத்துகளில் உயிரிழந்த சைக்கிளோட்டிகளின் எண்ணிக்கை 2024ல் 13 என்றிலிருந்து 2025ல் 17 என உயர்ந்தது.
சிங்கப்பூரின் சாலைப் பாதுகாப்பு கவனத்துக்குரிய நிலையை எட்டியுள்ளதைக் குறிக்கும் விதமாக போக்குவரத்து விபத்துகளில் மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10 ஆண்டுகள் காணாத அளவு 2016ல் 141 என்றிலிருந்து 2025ல் 149 என்றானது.
