தெம்பனிசில் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) காலை நேர்ந்த சாலை விபத்தில் சைக்கிளோட்டி ஒருவர் மாண்டார்.
காலை 7.45 மணியளவில் தெம்பனிஸ் அவென்யூ 2ஐ நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் அவென்யூ 9ல் ஒரு காரும் அவரது சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானதாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
அதனைத் தொடர்ந்து, சைக்கிளை ஓட்டிச் சென்ற 61 வயது ஆடவர் சுயநினைவின்றி சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, போதிய கவனமின்றி வாகனம் ஓட்டி காயம் விளைவித்ததாகக் கூறி, 47 வயது கார் ஓட்டுநரைக் காவல்துறை கைதுசெய்தது.
இதனிடையே, விபத்தை நேரில் கண்டவர் முன்வந்து சாட்சியம் அளிக்குமாறு அல்லது அதுகுறித்த காணொளி ஏதும் இருந்தால் பகிர்ந்துகொள்ளுமாறு மாண்டவரின் குடும்பத்தினர் சமூக ஊடகம் வழியாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

