தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேருந்து மோதி சைக்கிளோட்டி உயிரிழப்பு

1 mins read
40292a17-82e5-4056-92e2-50507774b54b
விபத்து தொடர்பில் 44 வயது தனியார்ப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். - படங்கள்: ஃபேஸ்புக்/எஸ்ஜி ரோடு விஜிலான்டே

பைனியர் ரோடு நார்த்தில் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 7) நேர்ந்த சாலை விபத்தில் சைக்கிளோட்டி ஒருவர் மரணமடைந்தார்.

அதன் தொடர்பில் 44 வயது தனியார்ப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் நீல நிறக் கூடாரத்திற்கு அருகே ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களுடன் கூடிய தனியார்ப் பேருந்து ஒன்று நின்றிருந்ததை இணையத்தில் பகிரப்பட்ட படங்கள் காட்டின.

வழக்கமாக, பொது இடத்தில் மனித உடலை மூடி வைப்பதற்காக அந்த நீல நிறக் கூடாரம் பயன்படுத்தப்படுகிறது.

அக்கூடாரத்திற்கு அருகே ஒரு மிதிவண்டி இருந்ததையும் காண முடிந்தது.

ஜூரோங் வெஸ்ட் அவென்யூவை நோக்கிச் செல்லும் துணைச் சாலையில் நேர்ந்த அவ்விபத்து குறித்து காலை 7.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அதற்குப் பத்து நிமிடங்களுக்குப் பிறகு உதவி கோரி சிங்கப்பூர்க் குடிமை தற்காப்புப் படைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

மிதிவண்டியை ஓட்டிச் சென்ற 61 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதைக் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவப் படையினர் உறுதிசெய்தனர்.

விபத்து தொடர்பில் காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்