ஐந்து கட்டடங்களைப் பாதுகாக்க பரிந்துரை

ஐந்து கட்டடங்களைப் பாதுகாக்க பரிந்துரை

2 mins read
7df4ec17-8f68-4fc6-9f0f-3e498818b40d
(மேல்வரிசை இடமிருந்து) ஜூரோங் ஹில் டவர், டக்கோட்டா கிரெசன்ட் வட்டாரம், (கீழ்வரிசை இடமிருந்து) டர்ஃப் சிட்டி பார்வையாளர் மாடங்கள், சிங்கப்பூர் பூப்பந்து அரங்கம், மலாயா கடற்படை நிர்வாகக் கட்டடம். - கோப்புப் படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

டக்கோட்டா கிரெசன்ட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகள், ஜூரோங் ஹில் வானோக்கு நிலையம், டர்ஃப் சிட்டி பந்தயத் திடலில் பார்வையாளர்களுக்கான இரு மாடங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் பாதுகாக்கப்படவுள்ளன.

ஐந்து இடங்களில் உள்ள கட்டடங்களைப் பாதுகாக்க நகர மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார். அவற்றில் இந்த மூன்று பகுதிகளில் உள்ள கட்டடங்கள் அடங்கும்.

உட்லண்ட்ஸ் நார்த்தில் உள்ள முன்னாள் மலாயா கடற்படை நிர்வாகக் கட்டடம், 100 கிலமார்ட் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் பூப்பந்து அரங்கம் ஆகியவை பாதுகாப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள எஞ்சிய இரு கட்டடங்கள். ஒட்டுமொத்தமாக இந்த ஐந்து கட்டடங்களும் சுதந்திரத்துக்குப் பிறகு சிங்கப்பூர் உருமாறியதைச் சித்திரிப்பதாக அமைச்சர் லீ, புதன்கிழமை (மே 14) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

உதாரணமாக, 1969ஆம் ஆண்டில் ஜேடிசி கார்ப்பரே‌ஷன் கட்டிய ஜூரோங் ஹில் டவர், சிங்கப்பூரின் தொழில்துறை உருமாற்றத்தின் சின்னமாக விளங்குகிறது, நாட்டின் பொருளியல் ரீதியான லட்சியங்களை எடுத்துக்காட்டுகிறது என்று திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் நமது வீடு என்பதையும் சிங்கப்பூரர்கள் எனும் நமது அடையாளத்தையும் எடுத்துரைக்கும் நடவடிக்கைகளில், கட்டடங்களைப் பாதுகாப்பது ஒன்று என அவர் கூறினார். பாதுகாக்கப்படவுள்ள இக்கட்டடங்களுக்கான திட்டங்கள், வரைவுப் பெருந்திட்டம் 2025 (Draft Master Plan 2025) கண்காட்சியில் வெளியிடப்படும் என்று திரு லீ தெரிவித்தார். அந்தக் கண்காட்சி வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ளது.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டம், அடுத்த 10லிருந்து 15 ஆண்டுகளுக்கு சிங்கப்பூருக்கான மேம்பாட்டுத் திட்டங்களை விவரிக்கும் ஆவணமாகும். ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் இந்த ஆவணம் மறுபரிசீலிக்கப்படும்.

சிங்கப்பூரில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள 7,200க்கும் அதிகமான கட்டடங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்