எம்1 நிறுவனத்தில் தகவல் கசிவு

எம்1 நிறுவனத்தில் தகவல் கசிவு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Nov 2026 - 8:50 pm

1 mins read

உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனமான எம்1, அதன் தளத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தகவல் கசிவு ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் பெயர்கள், அடையாள அட்டை விவரங்கள், பிறந்த தேதிகள், கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் மற்றும் வீட்டு முகவரிகள் முதலியவை கசிந்த தகவல்களில் அடங்கும்.

ஆயினும் பணப் பட்டுவாடா அட்டை விவரங்கள், நிதி அல்லது வங்கித் தகவல்கள், வாடிக்கையாளர் கணக்குகளைப் பயன்படுத்தும் வசதி ஆகியவை பாதிக்கப்படவில்லை என்றும் தகவல் கசிவு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்றும் நிறுவனம் தெரிவித்தது.

எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதை நிறுவனம் குறிப்பிடவில்லை.

இச்சம்பவத்தால் நிறுவனத்தின் அன்றாடச் சேவைகளும் வணிகச் செயல்பாடுகளும் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அல்லது கடிதம் வழியாகத் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

வாடிக்கையாளர்கள் தன்னிடம் ஒப்படைத்த தகவல்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் விசாரணைக்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மூன்றாம் தரப்பு நிபுணர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்தது.

“எதிர்பாரா அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கும்போது வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்று எம்1 கேட்டுக்கொண்டது.

அதிகாரத்துவ வழிகளில் தொடர்புகொள்வோரின் அடையாளத்தை உறுதிசெய்யுமாறும் அது அறிவுறுத்தியது.

இச்சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தெரியும் என்று கூறிய தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம், இது குறித்து விசாரணை நடத்துவதாகத் தெரிவித்தது.

கூடுதல் தகவல்களுக்காக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிறுவனம் எம்1ஐத் தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்