டிபிஎஸ் வங்கி ஆசியானின் மதிப்புமிக்க ‘பிராண்ட்’; வேகமான வளர்ச்சியில் கிராப்

டிபிஎஸ் வங்கி ஆசியானின் மதிப்புமிக்க ‘பிராண்ட்’; வேகமான வளர்ச்சியில் கிராப்

கோப்புப் படம்: பிசினஸ் டைம்ஸ்

30 Oct 2026 - 7:11 pm

2 mins read

2026ஆம் ஆண்டில் ஆசியான் வட்டார வர்த்தக முத்திரை (பிராண்ட்) மதிப்பில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின.

அதில், டிபிஎஸ் வங்கி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இப்பகுதியின் மதிப்புமிக்க வர்த்தக முத்திரையாகத் தனது நிலையைத் தக்க வைத்துக்கொண்டது.

சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட கிராப் நிறுவனமும் வர்த்தக முத்திரை மதிப்பில் அதிவேகமாக வளரும் ‘பிராண்டு’களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ என்னும் வர்த்தக ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட இவ்வாண்டுக்கான ‘ஆசியான் 500’ அறிக்கை இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) வெளியிடப்பட்ட இந்த வருடாந்தர அறிக்கை, ஆசியானின் மதிப்புமிக்க 500 வர்த்தக முத்திரைகளை வரிசைப்படுத்துகிறது.

தரவரிசைப் பட்டியலின் உச்சத்தில் சிங்கப்பூரின் ஆதிக்கம் வலுவாக இருந்தது. முதல் நூறு இடங்களில் சிங்கப்பூரின் 23 வர்த்தக முத்திரைகள் இடம்பெற்றன. இது, மற்ற எந்தவோர் ஆசியான் சந்தையைவிடவும் அதிகமாகும்.

இந்த வட்டாரத்துக்கான மொத்த வர்த்தக முத்திரை மதிப்பிலும் சிங்கப்பூரே முன்னிலை வகித்தது.

சிங்கப்பூரின் 88 வர்த்தக முத்திரைகள் இணைந்து மொத்தம் US$84.1 பில்லியன் மதிப்பைக் கொண்டிருந்தன.

ஒட்டுமொத்த ஆசியான் வட்டாரம் முழுவதும் மதிப்புமிக்க 500 ‘பிராண்டு’களின் கூட்டு மதிப்பு இந்த ஆண்டு எட்டு விழுக்காடு உயர்ந்து US$315.6 பில்லியனாக அதிகரித்துள்ளது.

மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனமான பெட்ரோனாஸ் இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

எனினும், அதன் வர்த்தக முத்திரை மதிப்பு 4 விழுக்காடு குறைந்து US$13.8 பில்லியனாகச் சரிந்தது.

குறைந்த எரிசக்தி விலைகள் அதன் வர்த்தக முத்திரையின் மதிப்பை பாதித்ததே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று ‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ தெரிவித்துள்ளது.

வர்த்தக முத்திரை மதிப்பு என்பது ஒரு நிறுவனத்தின் சந்தை மூலதனம் அல்லது ஒட்டுமொத்த மதிப்பீட்டைக் குறிக்காமல், அதன் ‘பிராண்ட்’ அடையாளத்திற்குக் கிடைக்கக்கூடிய பொருளியல் மதிப்பையே குறிக்கிறது.

குறிப்புச் சொற்கள்