சிங்கப்பூரின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ் வங்கி, மலேசியாவில் சேவையை விரிவாக்கம் செய்வது குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய வங்கிப் பங்குகளை வாங்குவது குறித்து அது ஆய்வு செய்வதாகத் தகவல்கள் கூறுகின்றன.
‘அலியான்ஸ் பேங்க் மலேசியா’வில் சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமாசெக் வைத்திருக்கும் 29.1 விழுக்காட்டுப் பங்குகளை வாங்க டிபிஎஸ் முனைந்துள்ளது. அந்தப் பங்குகளின் மொத்த மதிப்பு 460 மில்லியன் அமெரிக்க டாலர் (S$611 மில்லியன்) என்று கூறப்பட்டது.
டிபிஎஸ் வங்கியில் 28.9 விழுக்காட்டுப் பங்குகளை தெமாசெக் நிறுவனம் வைத்துள்ளது.
Retail banking எனப்படும் தனிநபர்களுக்கு வங்கிச் சேவை வழங்கும், குவைத் ஃபைனான்ஸ் ஹவுசின் மலேசியச் சொத்துகளை வாங்கவும் டிபிஎஸ் திட்டமிடுகிறது. விற்பனைக்கு விடப்பட்டுள்ள அவற்றின் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு தகவல் தந்த இரு தரப்புகளும் தங்கள் அடையாளத்தை வெளியிட மறுத்துவிட்டன.
மலேசிய வங்கிகளில் பங்குகளை வாங்குவதற்கு அந்நாட்டின் மத்திய வங்கியின் ஒப்புதலைப் பெறுவது அவசியம்.
தொடர்புடைய செய்திகள்
டிபிஎஸ் வங்கியின் பேச்சாளர் சந்தை குறித்த ஊகங்கள், வதந்திகள் தொடர்பில் தாங்கள் கருத்துரைப்பதில்லை என்று கூறிய வேளையில், தெமாசெக் நிறுவனம் கருத்துரைக்க மறுத்துவிட்டது.
நவம்பர் 8ஆம் தேதி வேலை நேரத்துக்குப் பிறகு இது குறித்துக் கருத்துரைக்கும்படி முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அலியான்ஸ் வங்கியும் மலேசியாவின் மத்திய வங்கியான பேங்க் நெகரா மலேசியாவும் பதிலளிக்கவில்லை.
குவைத் ஃபைனான்ஸ் ஹவுஸ், தனது மலேசிய வங்கிச் சேவை விற்பனை குறித்த நடைமுறை ஆரம்பகட்டத்தில் இருப்பதாகக் கூறியது. மேல்விவரங்களை வெளியிடவில்லை.