சிங்கப்பூரின் ஆகப் பெரிய தனியார் நன்கொடையாளர்கள் பட்டியலில் டிபிஎஸ் அறநிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் சமூகப் பணிகளுக்கு $61 மில்லியன் வழங்க அது உறுதியளித்தது. இது 2024ஆம் ஆண்டில் உறுதியளித்த $102.6 மில்லியனைவிட 40 விழுக்காடு குறைவாகும்.
சமூகப் பயனாக்க ஆலோசனை நிறுவனமான சொரிஸ்டிக் திங்கட்கிழமை (நவம்பர் 16) வெளியிட்ட தனியார் நன்கொடையாளர்களுக்கான பட்டியலில் சிங்கப்பூர் சமூக அறநிறுவனம் இரண்டாமிடத்தையும் நீ ஆன் கொங்சி மூன்றாமிடத்தையும் பிடித்தன. அவை முறையே $43.5 மில்லியனையும் $43.3 மில்லியனையும் வழங்கின.
பட்டியலில் உள்ள 160 அறநிறுவனங்கள் குறைந்தது $486 மில்லியன் மதிப்புள்ள மானியங்களை வழங்கின. இது முந்தைய ஆண்டு வழங்கப்பட்டதைவிட 16 விழுக்காடு அதிகமாகும். முதல் பத்து அமைப்புகள் $307.2 மில்லியன் வழங்கின.
முதல் பத்து இடங்களில் சிங்கப்பூர் வணிகச் சம்மேளன அறநிறுவனம் புதிதாக இணைந்து, ஒன்பதாமிடத்தைப் பிடித்தது. லீ அறநிறுவனம் நான்காமிடத்தையும், லியன் அறநிறுவனம் ஐந்தாமிடத்தையும், லோ டக் குவோங் அறநிறுவனம் ஏழாமிடத்தையும், எலைன் எட்வர்டோ சவேரின் அறநிறுவனம் பத்தாமிடத்தையும் பிடித்தன.
பல ஆண்டுத் திட்டங்களால் வருடாந்தரத் தொகை மாறுபடும் என டிபிஎஸ் அறநிறுவனத் தலைவர் கேரன் நுய் தெரிவித்தார். ஆயினும், பத்து ஆண்டுகளில் ஒரு பில்லியன் வெள்ளி வழங்கும் நீண்டகால இலக்கு மாறவில்லை என்றார் அவர்.
செலவின அடிப்படையிலான முதல் பத்து அமைப்புகளின் பட்டியலில் ஷா அறநிறுவனம் ஆறாமிடத்தையும் ஆசிய சமூக அறநிறுவனம் பத்தாமிடத்தையும் பிடித்தன.
