டிபிஎஸ் வங்கியின் ஆள்மாறாட்டம் சம்பந்தப்பட்ட குறைந்தது 14 மோசடிச் சம்பவங்கள் செப்டம்பர் 21 முதல் பதிவாகியுள்ளன. அதில் சுமார் $29,000 இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இணைய மோசடிகளின் அண்மைய அதிகரிப்பு குறித்து அக்டோபர் 8ஆம் தேதி காவல்துறையும் டிபிஎஸ் வங்கியும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இந்தத் தகவல்களை வெளியிட்டதுடன் இந்த மோசடிகளில் சிக்க வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்தன.
பாதிக்கப்பட்டவர்கள் டிபிஎஸ் வங்கியிலிருந்து ஒரு மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியைப் பெறுவார்கள். தங்கள் வங்கிக் கணக்குகள் அல்லது மின்னிலக்க அடையாள வில்லை தொடர்பான அவசர சிக்கலைத் தீர்க்க உட்பொதிக்கப்பட்ட இணைய இணைப்பை சொடுக்கு போடும்படி அவர்கள் வலியுறுத்தப்படுவார்கள்.
இணைப்பை சொடுக்கு போட்ட பிறகு அவர்கள் போலி இணையப் பக்கத்துக்கு அனுப்பப்படுவார்கள். அங்கு, அவர்கள் தங்கள் வங்கி விவரங்கள், வங்கி அட்டை விவரங்கள் அல்லது ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொற்களை நிரப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுறவார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் அல்லது அட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைக் கண்டறியும் போதுதான் தாங்கள் மோசடியில் சிக்கியுள்ளதை உணர்வார்கள்.
‘ஸ்கேம்ஷீல்டு’ (ScamShield) செயலியை நிறுவுதல், இணைய வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை அமைத்தல் மற்றும் தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியைப் பாதுகாக்க ‘மனி லாக்’ (Money Lock) அம்சத்தைப் பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு காவல்துறையும் டிபிஎஸ் வங்கியும் அறிவுறுத்துகின்றன.
‘ஸ்கேம்ஷீல்டு’ நேரடித் தொலைபேசிச் சேவை (ScamShield Helpline) போன்ற அதிகாரத்துவ வளங்களுடன் மோசடிக்கான அறிகுறிகளைச் சரிபார்க்கவும் அவர்கள் மக்களை வலியுறுத்துகின்றன.
“குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வழியாக சொடுக்கு போடக்கூடிய இணைப்புகளை வங்கிகள் உங்களுக்கு ஒருபோதும் அனுப்பாது. வங்கிகளில் இருந்து வரும் முறையான குறுஞ்செய்திகள் அவர்களின் அதிகாரபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட குறுஞ்செய்தி அனுப்புநர் அடையாளத்தைப் பிரதிபலிக்கும்,” என்று ஆலோசனை கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதுபோன்ற குற்றங்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள், 1800-255-0000 என்ற காவல்துறையின் நேரடி தொலைபேசி எண்ணை அழைக்கலாம் அல்லது காவல்துறை இணையத்தளம் மூலம் புகார் அளிக்கலாம்.