டிபிஎஸ் குழுமத்தின் தலைவர் பீட்டர் சியா இந்த ஆண்டிறுதியில் ஓய்வுபெற உள்ளதாகவும் குழுமத்தின் இயக்குநரவை உறுப்பினர் ஆண்டனி லிம் 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் வங்கியின் தலைவராகப் பதவி வகித்துவரும் திரு சியா, ஓய்வுக்குப் பின் ஓராண்டு காலத்துக்கு மூத்த ஆலோசகராக நியமிக்கப்படுவார்.
வங்கியின் மின்னிலக்க உருமாற்றத்தையும் அதிக வருவாய் ஈட்டும் வர்த்தக வளர்ச்சியையும் நோக்கிச் செயல்பட்ட காலகட்டத்தில், திரு சியா உறுதியான தலைமைத்துவத்தையும் உத்திபூர்வ வழிகாட்டலையும் வழங்கியதாக டிபிஎஸ் குறிப்பிட்டது.
இது, டிபிஎஸ் வங்கியை அதன் பாரம்பரியத்துடன் இணைத்தது. டிபிஎஸ் வங்கியின் கலாசாரமானது வாடிக்கையாளர் நலன்மீது கவனம் செலுத்துவதும் புத்தாக்கத்தைத் தழுவதும் ஆகும்.
தாம் பொறுப்பேற்றபோது உலகளாவிய நிதி நெருக்கடியிலிருந்து உலகம் மீண்டு வந்துகொண்டிருந்ததாகவும் அதன் பின்னர் டிபிஎஸ் புத்தாக்கம், செயல்பாட்டிற்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆசியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றாக உருமாறியுள்ளது என்றும் திரு சியா கூறினார்.
புதிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள திரு லிம், 2020 ஏப்ரல் முதல் வங்கியின் இயக்குநரவையில் செயலாற்றி வருகிறார். 2017ல் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு ஜிஐசி, பேங்கர்ஸ் டிரஸ்ட் நிறுவனங்களில் சிங்கப்பூர், லண்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் மூத்த தலைமைப் பொறுப்புகளை வகித்த அனுபவம் கொண்டவர் அவர்.
இதனிடையே, 2026 மூன்றாம் காலாண்டில் டிபிஎஸ் வங்கியின் நிகர லாபம் 5 விழுக்காடு குறைந்து $2.81 பில்லியனாகப் பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஈட்டப்பட்ட $2.95 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது குறைவு.
