சிங்கப்பூர் முதலீட்டு வங்கிக் கட்டணத்தில் முன்னணி வகிக்கும் டிபிஎஸ்

2 mins read
8c35346d-4c74-4992-a050-bc4599d39a15
முதலீட்டு வங்கிக் கட்டணம் 28.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் முதலீட்டு வங்கிகளின் செயல்பாடு 2025ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது.

இணைப்பு மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மீட்சியடைந்ததே அதற்கு முக்கியக் காரணமாகும்.

மூலதனச் சந்தை வணிகங்களும் வலுவாகச் செயல்பட்டுள்ளன.

முதலீட்டு வங்கிக் கட்டணங்கள் 2025ஆம் ஆண்டில் ஓராண்டுக்கு முன்பு இருந்ததைவிட 28.9 விழுக்காடு கூடி $864.6 மில்லியன் யுஎஸ் டாலரை (S$1.1 பில்லியன்) எட்டின.

இது, 2021க்குப் பிறகு அதிகபட்ச வருடாந்தர மொத்தமாகும் என்று லண்டன் பங்குச் சந்தைக் குழுமத்தின் ஒப்பந்தங்கள் புலனாய்வுக் குழு தெரிவித்தது.

முடித்து வைக்கப்பட்ட இணைப்பு, கையகப்படுத்தும் பரிவர்த்தனைகளுக்கான ஆலோசனைக் கட்டணங்கள் 265 மில்லியன் யுஎஸ் டாலராக இருந்தன. இது 2024ஐவிட 55.3 விழுக்காடு அதிகமாகும்.

பங்கு மூலதனச் சந்தைகளுக்கான வங்கிகளின் தரகுக் கட்டணங்கள் இரட்டிப்பாகி 210 மில்லியன் யுஎஸ் டாலராக இருந்தன. இது, 2021க்குப் பிறகு மிகவும் வலுவான நிலையைக் குறிக்கிறது.

கடன் மூலதனச் சந்தைக் கட்டணங்களும் 55.9 விழுக்காடு அதிகரித்து 155.2 மில்லியன் யுஎஸ் டாலராக வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்வைப் பதிவு செய்தன. இது, இதுவரை இல்லாத மிக உயர்ந்த அளவைக் காட்டுகிறது.

மாறாக, சிண்டிகேட் கடன் கட்டணங்கள் 24.1 விழுக்காடு குறைந்து 233.4 மில்லியன் யுஎஸ் டாலராக இருந்தன.

உள்நாட்டின் டிபிஎஸ் குழுமம் சிங்கப்பூரின் முன்னணி முதலீட்டுவங்கியாகத் தனது நிலையைத் தக்கவைத்துக் கொண்டது. மொத்தக் கட்டணத்தில் அதன் பங்கு மட்டும் 8.4 விழுக்காடாகும். அதன் மதிப்பு $72.9 மில்லியன் யுஎஸ் டாலர்.

இருந்தாலும் ஒட்டுமொத்த இணைப்பு மற்றும் கையகப்படுத்தும் செயல்பாடு சிங்கப்பூரில் மிதமான அளவில் இருந்தது. ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 2025ஆம் ஆண்டில் 70.4 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இது, 2024ஐவிட 9.1 விழுக்காடு குறைவு. அறிவிக்கப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 22.1 விழுக்காடாக 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது.

2025ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் மதிப்புள்ள ஏறக்குறைய பதினைந்து ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு 27.8 பில்லியன் யுஎஸ் டாலர். இருப்பினும் நான்காவது காலாண்டில் ஒரே ஒரு மெகா ஒப்பந்தம் மட்டுமே வெளியிடப்பட்டதால் ஆண்டு இறுதியில் செயல்பாடு குறைந்தது.

சிங்கப்பூர் நிறுவனங்களை இலக்காகக் கொண்ட ஒப்பந்தங்கள் 8.4 விழுக்காடு அதிகரித்து 26.9 பில்லியன் யுஎஸ் டாலராக உயர்ந்தன. இது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்