உணவங்காடிகளில் டிபிஎஸ் பேலா! செயலியைப் பயன்படுத்தி உணவு வாங்கும் வாடிக்கையாளர் மூன்று வெள்ளி வரை திரும்பப் பெறலாம் (cashback).
விலையில் ஒரு பங்கைத் திரும்ப் பெற வகை செய்யும் திட்டம் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாட டிபிஎஸ் / பிஓஎஸ்பி வெளியிட்டுள்ள மொத்தம் 23 மில்லியன் வெள்ளி மதிப்பிலான திட்டங்களில் இதுவும் ஒன்று.
சனிக்கிழமை (ஜூலை 12) முதல் வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வரை உணவங்காடிகள், அக்கம்பக்கத்துக் கடைத்தொகுதிகள் ஆகியவற்றில் சனிக்கிழமைகளில் டிபிஎஸ் பேலா! மூலம் உணவு, பொருள்கள் வாங்கும் சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர்வாசிகளும் மூன்று வெள்ளி வரையிலான தொகையைத் திரும்பப் பெறுவர்.
பேலா! செயலியை வருடிக் கட்டணம் செலுத்தும் முதல் 160,000 பேர் இந்தத் திட்டத்தால் பலனடைவர். இத்திட்டத்தில் தகுதிபெறும் மொத்தம் 22,000க்கும் அதிகமான உணவங்காடிக் கடைகள், ஈரச்சந்தைகள், அக்கம்பக்கத்துக் கடைகள் ஆகியவற்றில் 12 வாரங்களுக்குக் காலை எட்டு மணி முதல் பேலா மூலம் பொருள் வாங்கி ஒரு தொகையைத் திரும்பப் பெறலாம்.
வாழ்க்கைச் செலவினம், வர்த்தகச் செலவு ஆகியவற்றைக் குறைப்பதோடு பல தலைமுறையினர் பலனடைவதை ஊக்குவிப்பது இதுபோன்ற திட்டங்களின் நோக்கம் என்று டிபிஎஸ் சொன்னது.
ஒன் பொங்கோல் உணவங்காடியில் டிபிஎஸ் வங்கியின் எஸ்ஜி60 குறுகிய கால சமூக நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் கலந்துகொண்டார்.
“வாழ்க்கைச் செலவினம், சிங்கப்பூரர்கள் பலருக்குப் பல காலமாகக் கவலை தரும் ஒன்றாக இருந்து வருகிறது. சிங்கப்பூரர்களுக்கு உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க நாங்கள் பங்காற்றுகிறோம்,” என்று சிடிசி, எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவது குறித்து திரு கான் பேசினார்.