டிபிஎஸ், பிஓஎஸ்பி மின்னிலக்க வங்கிச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பின

டிபிஎஸ், பிஓஎஸ்பி மின்னிலக்க வங்கிச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பின

படங்கள்: பிஸ்னஸ் டைம்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

19 Mar 2026 - 2:39 pm

2 mins read

டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சிலரால் வியாழக்கிழமை (மார்ச் 19) நண்பகலில் அவ்வங்கிகளின் மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்த இயலவில்லை.

நண்பகல் 12 மணியிலிருந்து அவ்வங்கிகளின் செயலி மற்றும் இணையச் சேவைகளைப் பயன்படுத்த முடியாதது தொடர்பில் வாடிக்கையாளர்கள் புகாரளிக்கத் தொடங்கினர் என்று ‘டௌன்டிடெக்டர்’ இணையத்தளம் தெரிவித்தது.

பிற்பகல் 12.30 மணிக்குள் அத்தகைய 2,100 புகார்கள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆயினும், பிற்பகல் 1.19 மணியிலிருந்து டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கிகளின் இணைய, கைப்பேசிச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியது என்று பிற்பகல் 2 மணியளவில் ஃபேஸ்புக் பதிவு வழியாக டிபிஎஸ் வங்கி தெரிவித்தது.

டிபிஎஸ், பிஓஎஸ்பி மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்த முடியாதது குறித்து சமூக ஊடகங்கள் வழியாகவும் சிலர் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

“கோழிச்சோறு கடையில் பணம் செலுத்த முயன்றபோது ‘பேலா’ (PayLah!) வேலை செய்யவில்லை. கடைக்காரர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தபோது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது,” என்று டிபிஎஸ் வங்கியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

தன்னால் பேலா அல்லது பேநவ் வசதியைப் பயன்படுத்த முடியவில்லை என்றும் அதனால் பணம் எடுத்துவர மீண்டும் வீட்டிற்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது என்றும் இன்னொருவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2025 ஜூன் மாதம், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக டிபிஎஸ், பிஓஎஸ்பி வாடிக்கையாளர்கள் சிலரால் அவற்றின் மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்த முடியவில்லை.

2023 அக்டோபர் 14ஆம் தேதி நிகழ்ந்த சேவை இடையூற்றால் அவ்வங்கிகளின் சேவைகள் முடங்கின. அதன் காரணமாக, அவசியமற்ற வங்கிச் செயல்பாடுகள் தொடர்பில் டிபிஎஸ் வங்கிக்குச் சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆறு மாதக் கட்டுப்பாடு விதித்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்டிபிஎஸ்பிஓஎஸ்பிவாடிக்கையாளர்சேவைபாதிப்புமின்னிலக்கம்