2025ஆம் ஆண்டுக்கான யுரோமனி விருதுகளில் உலகின் சிறந்த வங்கியாக டிபிஎஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுமுதல் யுரோமனியின் ஆக உயரிய விருதை மூன்றாவது முறையாகப் பெற்றதை டிபிஎஸ் பகிர்ந்துகொண்டது.
“டிபிஎஸ் வங்கியின் உறுதியான நிதி செயல்பாடு, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதில் உள்ள அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு, புத்தாக்கத்தில் கவனம் போன்றவற்றுக்கு அங்கீகாரமாக விருது அமைகிறது,” என்று டிபிஎஸ் குறிப்பிட்டது.
எதிர்காலத்தை நோக்கிய அணுகுமுறை, நம்பகத்தன்மையில் கவனம் போன்ற அம்சங்களால் டிபிஎஸ் வங்கி தலைசிறந்து காணப்படுகிறது என்றார் யுரோமனியின் வங்கித் தலைவரான டொமினிக் ஓ நீல்.
தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ் வங்கிக்கு வாடிக்கையாளர்களுக்கு நல்ல அனுபவம் தரும் உலகின் தலைசிறந்த வங்கி, பொறுப்புடன் நடந்துகொள்ளும் நிறுவனம் போன்ற அங்கீகாரங்களும் கிடைத்தன.
டிபிஎஸ் வங்கி, இன்னும் சிறந்த வகையில் முதலீடு செய்யவும் நிதி தீர்மானங்களை எடுக்கவும் வழிகாட்டும் பில்லியன்கணக்கான தகவல்களை 13 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாகப் பகிர்ந்துகொண்டது.
நீடித்த நிதிக்காக டிபிஎஸ் வங்கி $89 பில்லியனையும் ஒதுக்கியுள்ளது.