சிங்கப்பூரின் ஆகப்பெரிய வங்கியான டிபிஎஸ், சனிக்கிழமை சேமிப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி சில குறிப்பிட்ட அரிசி, முட்டைகளுக்கு டிபிஎஸ், பிஓஎஸ்பி அட்டைகளைப் பயன்படுத்தி $3 விழுக்காடு கழிவு பெறலாம்.
இந்தத் திட்டம் சனிக்கிழமையன்று (ஜூலை 18) கிளமெண்டி வெஸ்ட்டில் உள்ள ஷெங் சியோங் பேரங்காடியில் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
அப்போது, ஐந்து கிலோ அரிசிப்பையை வாங்கிய 62 வயது இல்லத்தரசியான ஜென்னி குவெக், போட்டியில் பரிசை வென்றதுபோல அப்பையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். அந்த அரிசிப்பையின் வழக்கமான விலை 7.90 வெள்ளி. ஆனால், மூன்று வெள்ளி கழிவுக்குப் பிறகு அவர் கொடுத்த தொகை வெறும் $4.90.
விலைவாசி அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் இத்தகைய திட்டம் ஓரளவு நிம்மதி தருவதாக அவர் கூறினார்.
டிபிஎஸ் வங்கியின் இந்தச் சிறப்புச் சலுகை ஜூலை 18ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதிவரை நீடிக்கும்.
தீவு முழுவதும் உள்ள ஜயன்ட், ஷெங் சியோங் பேரங்காடிகளில் இச்சலுகையைப் பெற முடியும்.
சிங்கப்பூரர்களின் செலவினங்களைச் சமாளிக்க உதவும் நோக்கத்தில் டிபிஎஸ் வங்கி ஒதுக்கியுள்ள 10 மில்லியன் வெள்ளி திட்டத்தின் ஒரு பகுதியாக இச்சலுகை வழங்கப்படுகிறது.
வரும் செப்டம்பர் மாதத்தில் சனிக்கிழமைகளில் உணவங்காடி நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகளில் ‘பேலா!’ செயலியைப் பயன்படுத்துவோருக்கு $3 ரொக்கத்தைத் திருப்பித்தரும் சலுகையை டிபிஎஸ் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஜூலை 18ஆம் தேதி கிளமெண்டியில் நடைபெற்ற தொடக்க விழாவில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் அவரது வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கசாண்ட்ரா லீயும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் டெஸ்மண்ட் லீ, அரசியல் சார்ந்த பூசல்கள், வணிகப் பதற்றங்களால் விலைவாசி அதிகரித்துள்ளதால் மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு டிபிஎஸ் வங்கியின் இந்தச் சலுகை மேலும் வலுசேர்க்கிறது என்று குறிப்பிட்டார்.
“தனிமனிதராக இருந்தாலும் சரி, பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, சமுதாயம் செழிக்கும்போதுதான் நாமும் செழிக்க முடியும்,” என்று கூறிய அவர், சிங்கப்பூரர்களுக்குக் கைகொடுக்க மற்ற நிறுவனங்களும் முன்வரும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.,
தீவு முழுவதும் உள்ள 129 பேரங்காடிகளில் இந்தச் சலுகையைப் பெற முடியும். ஜெயண்ட் கடையில் கிடைக்கும் ‘ஜயன்ட் ஃபார்ம் ஃப்ரெஷ் முட்டைகள்’ (30 முட்டைகள் அடங்கிய அடுக்கு) மற்றும் ‘ஜயன்ட் ஜாஸ்மின் வாசனை அரிசி’ (5 கிலோ), அதேபோல ஷெங் சியோங் கடையில் உள்ள ‘எக் ஃபார் யூ ஃப்ரெஷ் முட்டைகள்’ (30 முட்டைகள்), ‘ஹேப்பி ஃபேமிலி ஜாஸ்மின் வாசனை அரிசி’ (5 கிலோ) ஆகியவற்றுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தும்.
ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒரு நாளைக்கு ஒரு பொருளுக்கு ஒருமுறை மட்டுமே இந்தச் சலுகையைப் பெற முடியும். வாரந்தோறும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கிட்டத்தட்ட 90,000 சலுகைகள் வழங்கப்படும்.
பொதுமக்களின் அன்றாடச் செலவுகளில் விலைவாசி உயர்வு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைக் கருத்தில் கொண்டே ரொக்கத்தைத் திருப்பியளித்தல், சலுகைத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக டிபிஎஸ் வங்கியின் சிங்கப்பூருக்கான தலைவர் லிம் ஹிம் சுவான் தெரிவித்தார்.
கடந்த 2025ஆம் ஆண்டில், ‘டிபிஎஸ் யூ கார்டு’ போன்ற எவ்ரிடே அட்டைகளைப் பயன்படுத்திய வங்கியின் வாடிக்கையாளர்கள், ரொக்கம், வெகுமதிகள் மூலமாக ஒட்டுமொத்தமாக 13.7 மில்லியன் வெள்ளி வரை சேமித்துள்ளனர்.

