டிபிஎஸ் குழுமம் தொடர்பில் பரவி வரும் ஒரு வதந்திக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவில் டிபிஎஸ் குழுமத்தின் ‘டிபிஎஸ் இந்தோனீசியா’ வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தோனீசியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ‘பிசிஏ’ வங்கியுடன் ‘டிபிஎஸ் இந்தோனீசியா’ வங்கி இணைக்கப்படலாம் என்ற செய்தியை டிபிஎஸ் குழுமம் மறுத்துள்ளது.
‘டிபிஎஸ் இந்தோனீசியா’ வங்கி, பிசிஏ வங்கியுடன் இணைக்கப்பட உள்ளதாக இந்தோனீசியச் சமூக ஊடகங்களில் அண்மையில் தகவல்கள் பரவின. பிசிஏ வங்கி மட்டுமே தொடர்ந்து செயல்படும் என்றும், இழப்பீடாக டிபிஎஸ் இந்தோனீசியா பங்குதாரர்களுக்குப் புதிய பிசிஏ பங்குகள் வழங்கப்படும் என்றும் அப்பதிவுகள் கூறின.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த டிபிஎஸ் பேச்சாளர், “இந்த வதந்தியில் உண்மை இல்லை,” என்றார்.
இந்தப் பொய்ச் செய்தியால் அக்டோபர் 28ஆம் தேதி பிசிஏ வங்கியின் பங்கு விலை கிட்டத்தட்ட 7 விழுக்காடு உயர்ந்தது.
‘டிபிஎஸ் இந்தோனீசியா’, அந்நாட்டில் உள்ள பெருநிறுவனங்கள், சிறிய, நடுத்தரத் தொழில்கள், பயனீட்டாளர்களுக்கான வங்கிச் சேவைகளை வழங்குகிறது.
ஜகார்த்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட பிசிஏ வங்கி, சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்தோனீசியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாகும். ஹார்டோனோ சகோதரர்கள் அந்த வங்கியின் முக்கியப் பங்குதாரர்கள் ஆவர்.
