ஆபத்தான நீல நத்தை; புக்கெட்டில் எச்சரிக்கை

1 mins read
c45900b8-e582-4dd1-a71f-8d8a0fa95466
பார்க்க அழகாக இருந்தாலும் நீல நத்தை மிகவும் நச்சுத் தன்மை கொண்டவை. - படம்: த நே‌‌ஷன்

புக்கெட்: தாய்லாந்தின் புக்கெட் நகரில் உள்ள காரோன் கடற்கரையில் நீல நிறத்தில் உள்ள டிராகன் நத்தை (Blue Dragon sea slug) அதிக அளவில் தென்படுகின்றன.

பார்க்க அழகாக இருந்தாலும் அவை மிகவும் நச்சுத் தன்மை கொண்டவை. அதனால் உள்ளூர் வாசிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளும் கவனமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அந்த நீல நத்தை கொட்டினால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நீல நத்தை காரோன் கடற்கரையில் தென்படுவதாக ஃபேஸ்புக்கில் ‘எமர்ஜென்சி மெடிசின்’ என்னும் குழு பதிவிட்டது.

இந்த நீல நத்தைகள் வெப்பமிக்க கடல் பகுதிகளில் இருக்கும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட கடற்பகுதிகளில் காணலாம்.

நீல நத்தைகள் பொதுவாக 2.5 செண்டி மீட்டர் முதல் 3.8 செண்டி மீட்டர் அளவில் இருக்கும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் நீல நத்தைகள் தாய்லாந்து கடற்கரைகளில் தென்பட்டன.

நீல நத்தைகளைக் கண்டால் அவற்றைத் தொட வேண்டாம் என்றும் உடனடியாகக் கரைக்கு வருமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். மேலும் அதிகாரிகளுக்கு விரைவாகத் தகவல்களைக் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

குறிப்புச் சொற்கள்