குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் உள்ள மெய் லிங் ஸ்திரீட்டில் ஒன்பது பூனைகளும் ஒரு செல்ல நாயும் இறந்து கிடந்தது தொடர்பாக ஆறு மாத காலம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவு வெளிவந்து உள்ளது.
நஞ்சு ஊட்டப்பட்டதன் காரணமாக அவை உயிரிழக்கவில்லை என்று விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளது.
தேசிய பூங்காக் கழகத்தின் விலங்கு, கால்நடைச் சேவைப் பிரிவு (AVS), சுகாதார அறிவியல் ஆணையம் (HSA), விலங்குவதைத் தடுப்புச் சங்கம் (SPCA) ஆகியன ஒன்றிணைந்து அந்த விசாரணையை நடத்தின.
2024 ஜூன் மாதம் மெய் லிங் ஸ்திரீட்டில் மூன்று பூனைகள் மாண்டு கிடந்தன.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து நடவடிக்கைகள் காரணமாக, அதாவது, புறா மற்றும் எலிகளை ஒழிக்கப் பயன்படுத்தப்பட்ட நச்சுப் பொருளை பூனைகள் உட்கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அவற்றின் மரணம் பற்றிய தகவலை 2024 ஜூன் 28ஆம் தேதி விலங்குவதைத் தடுப்புச் சங்கம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்து இருந்தது.
அந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம் கழித்து 11 வயதான செல்ல நாய் ஒன்று, ஏற்கெனவே இறந்து கிடந்த புறாக்களின் அருகே காணப்பட்ட உணவுத் துண்டுகளை மென்றதாகவும் அன்றிரவே அது இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தெருவில் திரியும் பூனைகளுக்கு உணவூட்டும் பிரி லிம், 68, என்னும் மாது பூனைகளின் மரணம் குறித்து அதிகாரிகளுக்கு முதன்முதலில் தகவல் கொடுத்து இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
மரணம் குறித்து அவரிடமும் செல்ல நாயின் உரிமையாளரிடமும் விசாரணை நடத்திய அதிகாரிகள், பூச்சிக்கொல்லி நிறுவனங்கள், கால்நடைகளைப் பரிசோதித்த மருத்துவர்களிடமும் தகவல்களைத் திரட்டினர்.
தேசிய பூங்காக் கழகத்தின் அமலாக்கம் மற்றும் புலன்விசாரணைப் பிரிவின் குழும இயக்குநர் ஜெசிக்கா குவோக் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய வினாக்களுக்குப் பதிலளிக்கைவில் அவர் இவற்றைக் கூறினார்.